தமிழக ஒக்சிசனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்-எடப்பாடி பழனிசாமி

download 43
download 43

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிசனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருவதால், ஒக்சிசனை பிற மாநிலங்களுக்கு அனுப்பவேண்டாம் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், ”தற்போது உள்ள சூழலை பார்க்கையில், தினமும் 450 மெட்ரிக் டன் ஒக்சிசன் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் 400 மெட்ரிக் டன்தான் தமிழகத்தில் உற்பத்தி ஆகிறது. இந்நிலையில், ஒக்சிசனை தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கொண்டு சென்றால் இங்கு பற்றாக்குறை ஏற்படும். ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் பிற மாநிலங்களுக்கு கொண்டுசெல்வதை உடனே ரத்து செய்யவேண்டும்,”என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிசனை மாநில அரசிடம் கலந்தாலோசிக்காமல் வேறு மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தனர்.

மாநிலம் முழுவதும் ஒக்சிசன் தேவை அதிகரித்திருக்கும் நிலையில், அதைக் கொண்டு செல்வதற்கு வசதியாக கிரீன் காரிடார் என்ற தடையில்லா பெட்டகப் போக்குவரத்துக்கு மாநில அரசு ஏற்கெனவே ஏற்பாடு செய்திருக்கிறது. மருத்துவமனைகளில் எங்கேனும் ஒக்சிசன் தேவை ஏற்பட்டால் 104 என்ற எண்ணில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.