இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தளபதி உள்ளிட்ட 20 பேர் உயிரிழப்பு

download 35
download 35

இஸ்ரேல் நடத்திய வான்வெளிதாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பின் ரொக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக நேற்றைய தினமே இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் ஜெருசலேம் பகுதியிலிருந்து பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துவந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெருசலேமில் உள்ள அல் அச்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் காவல்துறையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

முதலில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலை தொடங்கினர். அதன் பின்னர் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலை தொடர்ந்து ஷைக் ஜாராவில் இருந்து பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றும் செயற்பாட்டை சிறிது நாட்களுக்கு பிற்போட இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.

வழக்கு ஒத்திவைக்கப்பட்டபோதும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினர் நேற்று ரொக்கெட் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாவே இஸ்ரேல் நேற்றைய தினம் பதிலடி தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும், பாலஸ்தீன மக்களும் தாக்குதலை கைவிட்டு அமைதிகாக்கும்படி உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன ஐக்கிய நாடுகள் அமைப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல தரப்புக்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டது. இஸ்ரேல் மிகப்பெரிய பலமுடன் திருப்பி கொடுக்கும்’ என்றார். இதனால், இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.