இந்தியாவில் மாட்டுச்சாணத்தை விமர்சித்தவருக்கு எதிராக வழக்கு!

1234
1234

மணிப்பூர் மாநில பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் திக்கேந்திர சிங். கொரோனா பாதிப்பால் கடந்த 13ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் பாஜக தலைவர் திக்கேந்திர சிங் உயிரிழந்தது தொடர்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் சந்திர வாங்கேம் என்ற பத்திரிக்கையாளரும், எரேந்திரோ லிசோம்பம் என்ற சமூக செயற்பாட்டாளரும் தங்களது முகப்புத்தக பக்கங்களில் கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.

ஊடகவியலாளர் கிஷோர் சந்திர வாங்கேம் தனது முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மாட்டுச்சாணமும், கோமியமும் கொரோனாவுக்கு எதிராக செயற்படாது. ஆதாரமற்ற வாதங்கள். நாளை நான் மீன் சாப்பிடப்போகிறேன். ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டிருந்தார்.

சமூக செயற்பாட்டாளரான எரோந்திரோ லிசோம்பம் தனது முகப்புத்தக பக்கத்தில், கொரோனா வைரசை குணப்படுத்துவதற்கான மருந்து மாட்டுச்சாணம் மற்றும் மாட்டுச்சிறுநீர் அல்ல. கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்து அறிவியல் மற்றும் பொதுஅறிவு என்பனவாகும் பேராசிரியரே. ஆழ்ந்த இரங்கல் ‘(ஆர்.ஐ.பி.)’ என பதிவிட்டிருந்தார்.

ஊடகவியலாளர் கிஷோர் சந்திர வாங்கேம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எரேந்திரோ லிசோம்பம் ஆகிய இருவரின் சமூகவலைத்தள பதிவுகள் பாஜக மாநில தலைவர் திக்கேந்திர சிங் கொரோனாவால் உயிரிழந்ததை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக மணிப்பூர் மாநில பாஜக அணியினர் சார்பில் காவல்துறை முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இந்த முறைப்பாடை்டையடுத்து, கிஷோர் மற்றும் எரேந்திரோ லிசோம்பம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதே வழக்கு தாக்கல் செய்யப்படும்.

எனவே, இந்த கைது சம்பவத்துக்கு பத்திரிக்கையாளர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.