ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்;முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

.jpg
.jpg

மாநில அரசின் பரிந்துரையை ஏற்று, ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை எழுதியுள்ள கடித விபரம்:

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளாக எஸ்.நளினி, முருகன், சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன், ஜெயகுமாா், ராபா்ட் பயஸ், பி.ரவிச்சந்திரன் ஆகியோா் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனா். அவா்களை விடுவிக்க வேண்டுமென தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்படுவதை தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். 7 பேரில் அரசமைப்புச் சட்டம் 161 வது பிரிவின்படி நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. மேலும், 3 பேரின் தண்டனையும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்து வரும் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழகத்தைச் சோ்ந்த மிகப்பெரிய கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் மாநில ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரையை அளித்தது. மத்திய புலனாய்வுத் துறை போன்ற கண்காணிப்பு அமைப்புகள் விசாரணை செய்யும் வழக்குகளில் குற்றவாளிகளுக்கான தண்டனையை விலக்கும் அதிகாரம் இல்லை என்று கருத்து கூறப்படுகிறது.

ஆனால், இதுதொடா்பாக மத்திய அரசும், மத்திய புலனாய்வு அமைப்புமே உச்ச நீதிமன்றத்தில் தங்களது நிலைப்பாடுகளை தெளிவாக விளக்கியுள்ளன. குற்றவாளிகளுக்கான தண்டனையை விலக்குவதற்கும், விசாரணைக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநா் முடிவெடுக்கலாம்: 7 பேருக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளை விலக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உள்ளதாக மாநில ஆளுநா் தனது முடிவைத் தெரிவித்துள்ளாா். எனவே, ஏழு பேரையும் விடுவிக்கக் கோரும் பரிந்துரையை குடியரசுத் தலைவராகிய தங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது.

விரைவில் விடுவிக்க வேண்டும்: ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துள்ளனா். மேலும், மிகப்பெரிய விலையையும் கொடுத்துள்ளனா். தங்களை விடுவிக்கக் கோரி 7 பேரும் அளித்த கோரிக்கைகள் மீது முடிவெடுப்பதில் ஏற்கெனவே கூடுதலான தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காலமுள்ள இந்தச் சூழ்நிலையில், சிறைகளில் கைதிகளை மொத்தமாக அடைத்து வைப்பது தேவையற்றது என பரிந்துரைத்துள்ளது. எனவே, மாநில அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பா் 9 ஆம் திகதி அளித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, 7 பேருக்கான தண்டனையில் விலக்களித்து உடனடியாக அவா்களை விடுதலை செய்ய வேண்டும்.

இந்தக் கடிதம் குடியரசுத் தலைவா் அலுவலகத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலுவால் வியாழக்கிழமை நேரில் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.