உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்தது

E11JjbPUUAAj7 D 1
E11JjbPUUAAj7 D 1

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை அந்தாட்டிக்கா பனிப் பிரதேசத்திலிருந்து உடைந்து கடலில் மிதக்கத் தொடங்கியிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, ‘ஏ-76’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பனிப்பாறை, புது டெல்லியைவிட 3 மடங்கு பெரியது என்று தெரியவந்துள்ளது.

டெல்லியின் பரப்பளவு 1,484 சதுர கிலோ மீட்டா்களாக உள்ள நிலையில், இந்தப் பனிப்பாறை சுமாா் 4,320 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்டதாகும்.

170 கி.மீ. நீளமும், 25 கி.மீ. அகலமும் கொண்டுள்ள அந்தப் பனிப்பாறை தற்போது அந்தாட்டிக்கா பனிப் பிரதேசத்திலிருந்து உடைந்து அந்தப் பகுதியிலுள்ள வெடல் என்ற கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது.

ஏ-76 பனிப்பாறை அண்டாா்டிகா பனிப் பிரதேசத்தின் ‘ரோனி’ என்ற பரப்பிலிருந்து பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியிருப்பதை பிரிட்டன் அந்தாட்டிக்கா ஆய்வு மையம் கண்டறிந்ததாகவும், அதை அமெரிக்காவின் தேசிய பனிப் பிரதேச மையம் உறுதி செய்துள்ளதாகவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரோனி உட்பட பல்வேறு பனிப் பரப்புகள் இணைந்ததே அந்தாட்டிக்கா நிலப் பகுதியாகும்.

அந்தாட்டிக்காவிலிருந்து பனிப்பாறைகள் உடைவது இது முதல் முறையல்ல. கடந்த பெப்ரவரியில் பாரீஸ் நகரைவிட 1.5 மடங்கு பெரிய பனிப்பாறை அந்தாட்டிக்காவின் பிரன்ட் பனிப் பரப்பிலிருந்து உடைந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல 2017-ஆம் ஆண்டிலும் ஒரு பனிப்பாறை உடைந்தது.

எனினும், பனிப் பாறைகள் இவ்வாறு உடைந்து கடலில் மிதக்கத் தொடங்குவது சுற்றுச்சூழல் ஆா்வலா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக வெப்பமயமாதலும், பருவநிலை மாறுபாடுமே இவற்றுக்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா்.