சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸில் பிரேரணை

1608661307551
1608661307551

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி) நூற்றாண்டு நிறைவுக்கு வந்துள்ள நிலையில், கடந்த 100 ஆண்டுகளில் சீனாவின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து அமெரிக்காவின் சட்டமியற்றும் இரு கட்சி குழு பிரேரணையொன்றைச் சமர்ப்பித்துள்ளது.

குடியரசுக் கட்சியின் விஸ்கான்சின் பகுதி உறுப்பினர் மைக் கல்லாகர் தலைமையில், இந்த பிரேரணை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 1930 ஆம் ஆண்டு முதல் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் சொந்த மக்களுக்கு எதிராக செய்த அட்டூழியங்களை பட்டியலிடுவதாக உள்ளதோடு சுதந்திரத்திற்கான போராட்டத்தில் சீன மக்களுடன் அமெரிக்கா நிற்பதாகவும் உறுதியளிப்பதான உள்ளடக்கத்தினைக் கொண்டுள்ளது.

இந்தப் பிரேரரணையை டெக்சாஸின் குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் மைக்கல் மெக்கால், நியூயார்க்கின் எலிஸ் ஸ்டெபானிக் மற்றும் பென்சில்வேனியாவின் பிரையன் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோர் இணை அனுசரணை வழங்கியுள்ளனர். இந்தப் பிரேரணையில் அரிசோனாவின் பிரதிநிதிகள் ரூபன் காலெகோ, நியூ ஜெர்சியின் ஜோஷ் கோட்ஹைமர் மற்றும் மைனேயின் ஜாரெட் கோல்டன் ஆகிய மூன்று ஜனநாயக சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.

1951 ஆம் ஆண்டில் திபெத்தை இணைத்ததில் இருந்து, 2017 முதல் ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்களுக்கு எதிரான “கொடூரமான மனித உரிமை மீறல்கள்” வரை 30 க்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களை அப்பிரேரணையில் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“அடக்குமுறை, சித்திரவதை, வெகுஜன சிறைவாசம் மற்றும் இனப்படுகொலை உள்ளிட்ட 100 ஆண்டுகால மனித உரிமை மீறல்களுக்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியை பிரதிநிதிகள் சபை கண்டிக்கிறது” என்று கல்லாகர் இறுதியாக நிறைவேற்றுவதற்கு முன்மொழியப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழு அமெரிக்காவை “மக்கள் சீனக் குடியரசின் காலத்தில் மீறப்பட்ட மனித உரிமைகளை கண்டிக்கும் தீர்மானத்தினை ஆதரிப்பதற்கு ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்களையும் கூட்டாளர்களையும் அழைக்குமாறு கோருவதோடு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாத நாளை எதிர்நோக்குவதாகவும் உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களையடுத்து ஜூலை முதலாம் திகதி முதல் சீனா பாரிய கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருவதால், பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கம், நகர அரண்மனை வளாகம் மற்றும் பல சுற்றுலா தளங்களை சீனா மூடியுள்ளது.

கொரோனா வைரஸின் தோற்றத்தை கண்டுபிடிப்பதன் முக்கியத்துவத்தை கல்லாகர் கோடிட்டுக் காட்டியுள்ளதோடு மேலும் உலகளாவிய தொற்றுநோயை உருவாக்கிய சீனா பொறுப்புக்கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே விஸ்கான்சின் குடியரசுக் கட்சி வைரஸின் தோற்றம் குறித்து திறந்த மற்றும் வெளிப்படையான விசாரணையை அனுமதிக்க மறுப்பதன் மூலம் சீனாவின் “மூடிமறைப்பு” குறித்து விமர்சித்ததோடு, தொற்றுநோய் ஒரு ஆய்வக கசிவின் விளைவாக இருந்தது என்ற கோட்பாட்டை உறுதிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டிருந்தது.

எனினும், இதற்கு சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியனின் அளித்த பதிலில் அக்குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்ததோடு, மேற்குலகின் புதிய பைத்தியக்காரத்தனமான பிரசாரம் என்றும் கூறியதோடு வைரஸ் சீனாவில் உள்ள உயிர் பாதுகாப்பு ஆய்வகத்தில் தொடங்கவில்லை, மாறாக அமெரிக்காவின் ஒரு ஆய்வகத்தில் தான் தொடங்கியது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம், ஜின்ஜியாங் மற்றும் ஹாங்காங்கின் நிலைமை குறித்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் கவலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் சீனாவும் தனது செய்திகளை உலகிற்கு அனுப்ப ஆர்வமாக உள்ளது என்று என்.எச்.கே வேர்ல்ட் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஒரு கூட்டத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங், “தாழ்மையான, நம்பகமான, அன்பான மற்றும் மரியாதைக்குரிய” ஒரு நாடாக சீனாவின் உருவகத்தை உருவாக்க அவர்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.