டெல்டாவைவிட அபாயகரமான லம்படா கொரோனா!

கொரோனா2
கொரோனா2

புதிதாகத் தோன்றியுள்ள லம்படா என்ற வகையைச் சோ்ந்த கொரோனா, இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகையைவிட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயத் தன்மை கொண்டது என்று மலேசிய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சுட்டுரையில் (டுவிட்டா்) அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரிட்டனில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் டெல்டா வகைக் கொரோனாவைவிட, புதிதாகப் பரவி வரும் லம்படா வகை கொரோனா அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது. அந்தத் தீநுண்மி தற்போது வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 4 வாரங்களில் மட்டும் லம்படா வகை கொரோனா 30 க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவில் அந்த வகை கொரோனா முதல்முறையாகக் கண்டறியப்பட்டது. அந்த நாட்டில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் உயிரிழப்பு விகிதம் உலகிலேயே மிக அதிகம்.

பிரிட்டனிலும் லம்படா வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் 6 பேருக்கு அந்த வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தனது சுட்டுரைப் பதிவில் மலேசிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்மை மட்டுமன்றி, டெல்டா கொரோனாவைவிட அதிக வேகத்தில் பரவும் தன்மையும் லம்படா வகைக் கொரோனாவுக்கு இருக்கலாம் என்று மருத்துவ நிபுணா்கள் சிலா் கவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

82 சதவீத பாதிப்பு: பெருவில் புதிதாகக் கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் 82 சதவீதம் பேரிடம் லம்படா வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த வகை கொரோனாவின் ஆதிக்கம் பெருவில் அதிகமாக இருந்தாலும், சிலியில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 31 சதவீத புதிய கொரோனா நோயாளிகளிடம் லம்படா வகை கொரோனா கண்டறியப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 186,004,716 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 4,020,491 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 170,197,444 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 11,786,752 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 77,869 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.