டோக்கியோ ரயிலில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் படுகாயம்!

21 610e053a9b8b3
21 610e053a9b8b3

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுவரும் நிலையில், ஜப்பானின் மேற்கு நகரிலுள்ள செடாகயா வார்டு பகுதியில் புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென சக பயணிகள் மீது கத்தியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார்.

இத்தாக்குதலில் 20 வயது இளம் பெண் ஒருவர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்த அந்நாட்டு காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதற்கிடையில், தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அத்தோடு, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து ஒரு கத்தியும் கையடக்கத்தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, தாக்குதல் நடத்திய நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஒலிம்பிக் தொடரின் குதிரையேற்ற போட்டி நடைபெறும் மைதானத்தை அண்மித்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.