இமாச்சல் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் பலி!

AP21223400980018
AP21223400980018

வட இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து மேலும் நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனால் குறித்த அனர்த்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. நேற்று கின்னார் மாவட்டத்தில் ரெக்காங் பியோ – சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இதில் ஒரு சரக்கு வாகனம் மற்றும் பேருந்து உள்ளிட்ட சில வாகனங்கள் சிக்கிக்கொண்டன. அந்த வாகனங்களில் இருந்தவர்களில் பலர் மண்ணில் புதைந்தனர்.

இந்தோ – திபெத் எல்லை காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

இதுவரையான நிலவரப்படி 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 60 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.