இறுதி தொகுதி பிரித்தானிய துருப்பினர், ராஜதந்திரிகள் காபூலிலிருந்து வெளியேறினர்!

PRI 195023864
PRI 195023864

இறுதி தொகுதி பிரித்தானிய துருப்பினர், ராஜதந்திரிகள் மற்றும் தூதுவராலய அதிகாரிகள் காபூலை விட்டு வெளியேறியுள்ளதாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இவர்களில் ஒரு நாள் வயதான சிசு ஒன்று உட்பட 2200 சிறார்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி முதல் பிரித்தானியாவினால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானிற்கான பிரித்தானிய தூதுவராலயத்தை, கட்டாரில் இருந்து இயங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய படையணியை சேர்ந்தவர்களில் 457 பேர் பலியாகியுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் படையணியினரை வரவேற்ற அந்தநாட்டு பாதுகாப்பு செயலர் பென் வொலஸ், ஆப்கானிஸ்தானில் கடமையாற்றிய போது ஒவ்வொருவரும் அதியுயர் தொழில் திறமையினையும் வீரத்தினையும் வெளிப்படுத்தி உள்ளதாக பராட்டினார்.

பிரித்தானிய படையினருடன் இணைந்து பணியாற்றிய 8 ஆயிரம் ஆப்கானிஸ்தானிய பிரஜைகளும் பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் உடனடியாக விருந்தகங்களில் தங்க வைப்பார்கள் என தெரிவித்துள்ள அதிகாரிகள், அவர்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலானவர்களுக்கு பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையவர்களுக்கு ஐந்து வருட கால நுழைவு அனுமதி வழங்கப்படுவதுடன் தொழில் புரியவும் அனுமதிக்கப்படுவர்.

அதன் பின்னர் பிரித்தானியாவில் நிரந்தர வதிவுரிமையினை பெறுவதற்கு தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.