முகநூல் நிறுவனத்தின் தளங்கள், செயலிகள் சிறுவர்களுக்குத் தீங்கு!

facebook
facebook

முகநூல் நிறுவனத்தின் தளங்கள் மற்றும் செயலிகள், சிறுவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என அதன் முன்னாள் பணியாளர் ஒருவர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

அது, பிரிவினையை ஏற்படுத்துவதுடன், தங்களது ஜனநாயகத்தையும் பலவீனப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகநூல் நிறுவனத்தின் முன்னாள் உற்பத்தி முகாமையாளரான ப்ரான்ஸஸ் ஹவுகன் என்ற 37 வயதுடைய பெண் ஒருவரே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், தமக்கு தெரியாத விடயங்கள் குறித்து அவர் கூறியுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களின் பாதுகாப்பு, அதன் கட்டுப்பாடுகள் மீதான வலியுறுத்தல்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் உலகின் மிகப் பிரபலமான சமூக வலைத்தளமாகும்.

முகநூல் நிறுவனம் மாதாந்தம் 2.7 பில்லியன் இயங்குநிலை பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான மில்லியன் பேர், அதன் ஏனைய செயலிகளான வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர்.

பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாத்தல் மற்றும் தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க அவசியமான நடவடிக்கை எடுக்கத்தவறியமை என்பவற்றிற்காக முகநூல் நிறுவனம் விமர்சனத்திற்கு உட்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.