டொங்கா இராச்சியத்தில் முதலாவது கொவிட் தொற்றாளர் அடையாளம்

corona 2
corona 2

பசுபிக் தீவுகளில் ஒன்றான டொங்கா இராச்சியத்தில் கொவிட்-19 தொற்றுறுதியான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் இராச்சியத்தின் பிரதான தீவான டொங்காடாபுவிலுள்ள  மக்கள் முடக்க நிலைக்கு தயாராகுமாறு அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

நியூஸிலாந்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கே கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ரீதியில் கொவிட்-19 பரவல் அற்ற நாடுகளில் ஒன்றாக டொங்காவும் காணப்பட்டது.

ஒரு இலட்சத்து 6 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட டொங்காவில் பெரும்பாலான மக்கள் டொங்காடாபுவில் வசிக்கின்றனர்.

அந்த நாட்டு மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு தொகுதியினர் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் அங்கு கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் அடையாளம் காணப்பட்ட நபர் இந்த மாத நடுப்பகுதியில் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டதாக டொங்காவின் சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர்.