பேராயர் டெஸ்மண்ட் டுடு காலமானார்!

21 61c81977a2e21 1
21 61c81977a2e21 1

தென்னாப்பிரிக்காவில் நிலவிய பாரிய நிறவெறியினை மாற்றுவதற்கு பெரும் பங்காற்றிய பேராயர் டெஸ்மன்ட் டுடு தமது 90ஆவது வயதில் காலமானார்.

தென்னாப்பிரிக்காவில் நிலவிய கொடிய நிறவெறியினை முற்றாக மாற்றி, தென்னாப்பிரிக்க மக்களுக்கு பெரும் மதிப்பை அவர் ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோஷா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஆன்மீக தலைவராக செயற்பட்டதுடன், நிறவெறி எதிர்ப்பு ஆர்வலராகவும் உலகளாவிய ரீதியாக மனித உரிமை செயற்பாட்டாளராகவும் செயற்பட்டார்.

இந்த செயற்பாட்டிற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1984ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அதேவேளை, தென்னாப்பிரிக்காவில் 1948ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டுவரை பெரும்பான்மையினராக கறுப்பு இனத்தவர்கள் இருந்த போதிலும் சிறுபான்மையினரான வெள்ளை இனத்தவர்கள் அடக்குமுறைமூலம் பல்வேறு மனித உரிமை மீறல்களை அந்த காலக்கட்டத்தில் மேற்கொண்டிருந்தனர்.

இவர்களுக்கு எதிராக டெஸ்மன்ட் டுடு மற்றும் நெல்சன் மண்டேலா போன்றவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் தமது இலக்கினை அடைந்தனர்.

இலங்கையில், அரசியல் தீர்வுவொன்று ஏற்பட வேண்டும் என அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருந்துடன், த ஹெல்டர்ஸ் என்ற அமைப்பின் மூலம், ஈழத் தமிழர்களது மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான அழுத்தங்களையும் அவர் பிரயோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.