பொதுமக்களின் அமைதியான குரல்கள் செவிமடுக்கப்பட வேண்டும் – அமெரிக்க தூதுவர் ஜுலி சங்

Julie Chung
Julie Chung

இலங்கையில் மற்றுமொரு அவசரகால நிலை பிரகடனப்படுத்தபட்டமை தொடர்பில் கரிசனை கொண்டிருப்பதாக அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களின் அமைதியான குரல்கள் செவிமடுக்கப்பட வேண்டும் என ருவிட்டர் பதிவொன்றில் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் எதிர்நோக்கும் உண்மையான சவால்களில் இருந்து நாட்டை மீண்டும் செழிப்பான பாதையில் கொண்டுசெல்ல நீண்டகால தீர்வுகள் அவசியமாகும்.

அவசரகால நிலை பிரகடனம் அதற்கு தீர்வாகாது என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரஜைகள் கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையை எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதை, ஒருமாத கால அமைதிப் போராட்டங்கள் எடுத்துக்காட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

அவசரகால நிலைமையானது நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க நிச்சயம் உதவாது என்றும், எதிர் விளைவை ஏற்படுத்தும் அன்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இதேநேரம், தமது ருவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள இலங்கைகான கனேடிய உயர்ஸ்தானிகர், கடந்த வாரங்களில் இலங்கை முழுவதும் இடம்பெற்ற போராட்டங்களில், அமைதியாக கருத்துச் சுதந்திரத்தை அனுபவிக்கும் மக்களை ஈடுபடுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

இது நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமையாகும்.

இந்த நிலையில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் அவசியம் ஏன் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளதென இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினொன் தெரிவித்துள்ளார்.