உலக வர்த்தக அமைப்பின் அங்கத்துவ நாடுகளிடம் ஐ.நா முன்வைத்துள்ள கோரிக்கை

ஐ நா
ஐ நா

உணவு பாதுகாப்பு நெருக்கடிக்கு மத்தியில் மனிதாபிமான நோக்கங்களுக்காக உணவு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளிடம் கோரியுள்ளது.

யுக்ரைனில் ரஷ்யா மேற்கொள்ளும் போர் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் உணவின்மையை எதிர்நோக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மிச்செல் பெச்லெட் மற்றும் அதன் வர்த்தக மற்றும் அபிவிருத்தி தலைவர் ரெபேக்கா க்ரின்ஸ்பென் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த வாரம் ஜெனிவாவில் இடம்பெறும் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் ஒருமித்த தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு முயற்சிக்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டில் மாத்திரம் ஆப்பிரிக்கா நாடுகள் தங்களுக்கு தேவையான உணவில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதானி சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக யுக்ரைனின் முக்கிய துறைமுகங்கள் தடைப்பட்டுள்ளன.

இது உலக உணவு பாதுகாப்பிற்கான அச்சத்தை அதிகரித்துள்ளது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் உலகில் அதிக கோதுமையை ஏற்றுமதி செய்யும் நான்காவது நாடாக யுக்ரைன் காணப்பட்டது.