நாடாளுமன்றில் பிரெக்சிட் மசோதா நிறைவேற்றம்

boris johnson
boris johnson

நீண்ட இழுபறிக்கு பிறகு பிரித்தானிய நாடாளுமன்ற கீழவையில் “பிரெக்சிட்” மசோதா நிறைவேற்றப்பட்டு மேலவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பில் ஆதரவு கிடைக்கப்பெற்ற போதும் அந்நாட்டு நாடாளுமன்றம் பலமுறை நிராகரித்து வந்தது.

அதன் விளைவான அப்போதைய பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவருக்கு பின் பிரதமரான போரிஸ் ஜான்சனும் “பிரெக்சிட்” விவகாரத்தில் தொடர்ந்து சரிவை கண்டார்.

நாடாளுமன்றத்தில் பழமைவாத கட்சி பெரும்பான்மை பலத்தினை இழந்தமையினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் இடம்பெற்றது.

பொதுத்தேர்தலில் பழமைவாத கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து, “பிரெக்சிட்” நடவடிக்கை தீவிரம் அடைந்தது.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு ஜனவரி 31ம் திகதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் என பொரிஸ் ஜான்சன் சூளுரைத்தார்.

அந்த வகையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான புதிய அரசு நாடாளுமன்றத்தின் கீழவையில் “பிரெக்சிட்” மசோதாவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.

உடனடியாக அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பழமைவாத கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் மசோதாவுக்கு ஆதரவாக 330 வாக்குகள் கிடைத்தன.

அதேசமயம் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி உள்பட பிற கட்சி உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் மசோதாவுக்கு எதிராக 231 வாக்குகள் பதிவாகின.

அதனை தொடர்ந்து பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. அடுத்த கட்டமாக இந்த மசோதா பாராளுமன்ற மேலவைக்கு அனுப்பப்பட இருக்கிறது.

அங்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

மேல் சபையிலும் மசோதா வெற்றி பெறும் பட்சத்தில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.