மதுபானம் கொரோனா வைரசை கொல்லும் என நம்பி குடித்த 27 பேர் பலி

21
21

மதுபானம் குடித்தால் கொரோனா வைரஸ் பரவாது அல்லது குணமாகும் என்ற வதந்தியை நம்பி, எரி சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஈரானில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அரசு செய்தி நிறுவனமானான ஐ.ஆர்.என்.ஏ இதை உறுதி செய்துள்ளது.

தென்மேற்கு மாகாணமான குஜெஸ்தானில் இருபது பேரும், அல்போர்ஸின் வடக்கு பிராந்தியத்தில் ஏழு பேரும் பூட்லெக் ஆல்கஹால் உட்கொண்டதால் இறந்துள்ளனர் என்று ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

சில முஸ்லிம் அல்லாத மத சிறுபான்மையினரைத் தவிர மற்ற அனைவருக்கும் ஈரானில் மது குடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆயினும் கொரோனா அச்சத்தால் எரி சாராயத்தை வாங்கி குடித்து இப்படி கொடூர மரணத்தை தழுவியுள்ளனர் அம்மக்கள்.

குஜெஸ்தானின் தலைநகரான அஹ்வாஸில் உள்ள ஜுண்டிஷாபூர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அலி எஹ்சான்பூர் இதுபற்றி கூறுகையில், எரி சாராயம் குடித்து 218 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“மது அருந்துவது கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்ற வதந்திகளால் இந்த நிலை ஏற்பட்டது” என்று அலி எஹ்சான்பூர் கூறினார்.

எரி சாராயத்தை அதிக அளவில் உட்கொண்டதால், மெத்தனால் உடலில் கலந்து, கண்பார்வையின்மை, கல்லீரல் பாதிப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டின் 31 மாகாணங்களையும், கொரோனா தாக்கி சீர்குலைத்துள்ளது. இந்த நோயால், 237 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 7,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.