“பேய்”களை வச்சு மனிதர்களை அச்சுறுத்தும் இந்தோனேசியா

7 2
7 2

இந்தோனேசியாவில் ஒரு கிராமத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க இரவு நேரங்களில் பேய்கள் போல் வேடமிட்டு சிலரை கிராம மக்கள் அமர்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர அரக்கனை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் உலக நாடுகள் ஈடுபடுகின்றன. அரசு என்னதான் மக்களை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அதை புரிந்து கொள்ள மக்கள் தயாராக இல்லை.

இதனால் இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் உள்ள கேபு கிராமத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் தடுக்கவும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும் மனிதர்களுக்கு பேய் வேடம் போட்டு அவர்களை சாலைகளில் உலவ விடுகின்றனர். இது போல் நூதன தடுப்பு நடவடிக்கையால் மக்கள் நிஜமாகவே பேய் என நினைத்துக் கொண்டு வெளியே வருவதை தவிர்க்கிறார்கள்.

இதுகுறித்து அந்த கிராமத் தலைவர் கூறுகையில் நாங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தினோம். போகாங் எனப்படும் பேய் வேடம் போடுவோர் பார்ப்பதற்கு பயங்கரமாக வேடமிட்டிருப்பர் என்பதால் மக்களுக்கு அவர்களை கண்டு ஒரு அச்சமிருக்கும். வழக்கமான முயற்சிகளுக்கு மத்தியில் இந்த முயற்சிக்கு காவல் துறையும் ஒத்துழைப்பு தந்தனர்.
போகாங்கள் எனப்படுவது முகத்தில் நிறைய பவுடர் போட்டுக் கொண்டு உடல் முழுவதும் வெண்ணிற ஆடையால் சுற்றப்பட்டிருப்பர். கண்களை சுற்றி மைகளால் கொடூரமாக வரைந்திருப்பர். இந்த மாதம் முதலில் இவற்றை அமல்படுத்தும் போது இவை எதிர்மறையான விளைவுகளை தந்தன. இதையடுத்து தற்போது இரவு நேரத்தில் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

சீனாவில் அதிக உயிரிழப்புகளை தொடர்ந்து இந்தோனேசியாவில் கேபு கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கிராமத்தினரே கையில் எடுத்துக் கொண்டார்கள். பேய் போல் வேடமிட்டவர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது, லாக்டவுன் அமல்படுத்துவது, மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்தனர்.

இன்னமும் கூட அந்த கிராம மக்களுக்கு கோவிட் 19 நோயின் வீரியம் தெரியவில்லை. அவர்கள் இயல்பாக எப்போதும் போல் இருக்க விரும்புகிறார்கள். அதனால் வீடுகளில் இருப்பது அவர்களுக்கு சற்றஉ கடினமாக இருக்கிறது. இந்த பேய் வேடம் போட்டவர்களை பார்த்தால் பெற்றோரும் குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அதுபோல் மாலை நேர பிரார்த்தனைக்கு பிறகு மக்கள் சாலைகளில் சுற்றுவதில்லை என கிராம நிர்வாகம் கூறுகிறது. இந்தோனேசியாவில் கொரோனாவால் பாதிக்கபபட்டோரின் எண்ணிக்கை 4,241 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 373 ஆக உள்ளது.