கொரோனா வைரஸ் நெருக்கடி ;தற்கொலை செய்யப்போகும் அவுஸ்ரேலியர்கள்

6 ws
6 ws

கொரோனா வைரஸ் நெருக்கடியினால் ஏற்படும் நிதி மற்றும் உளவியல் அழுத்தத்தால் ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலியர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது கொரோனா வைரஸ் நோயிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட தொற்றுநோய் மற்றும் பொருளாதார பணி நிறுத்தங்களின் தாக்கத்தின் விளைவாக, வரும் ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 750 முதல் 1,500 வரை தற்கொலைகள் கூடுதலாக நிகழும் என சிட்னி பல்கலைக்கழகத்தின் Brain and Mind Centre கணித்துள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் பதிவு செய்யப்படும் 3,000 தற்கொலைகளை விட இது, 25 முதல் 50 சதவீதம் வரை அதிகம் என கூறப்படுகின்றது.

பாடசாலைகள், விருந்தோம்பல் மற்றும் வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் தற்கொலையை நாடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய மருத்துவ சங்கம் மற்றும் மனநல நிபுணர்களுடன் ஒரு கூட்டு அறிக்கையில் சிட்னி பல்கலைக்கழகத்தின் Brain and Mind Centre, இதனைத் தெரிவித்துள்ளது.

கொவிட் -19 தொற்றுநோயால் இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அவர்கள் உளவியல், நிதி மற்றும் வீட்டு அழுத்தங்களை அனுபவிப்பதால் பாதிப்படைவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயணம், பொதுக்கூட்டங்கள் மற்றும் சில்லறை வணிகங்கள் மீதான கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து வாரத்திற்கு 4 பில்லியன் டொலர் குறைக்கப்பட்டு மில்லியன் கணக்கான மக்கள் வேலையை இழக்கவுள்ளனர்.

கொவிட் -19 வைரஸ் தொற்றை எதிர்கொள்வதில் அவுஸ்ரேலியா மிகவும் வெற்றிகரமான நாடுகளில் ஒன்றாகும். 25 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அவுஸ்ரேலியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 6ஆயிரத்து 896பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 97 பேர் உயிரிழந்துள்ளனர்.