கருணாநிதியின் ஜனன தினம் இன்று..!

4 uuui
4 uuui

முத்தமிழ் அறிஞர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான முத்துவேல் கருணாநிதியின் 97ஆவது ஜனன தினம் இன்றாகும்.

20ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசியல் மட்டுமின்றி தமிழக நலனிலும் தமிழக மக்களின் மீதும் அக்கறை கொண்டு பல்வேறு சமூக சீர்த்திருத்தங்களை அமுல்படுத்தியவர் கருணாநிதி.

1924ம் ஆண்டு திருக்குவளை என்ற ஒரு சிறிய கிராமத்தில் ஜூன் 3ஆம் திகதி முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார்.

1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ஆம் திகதியன்று முரசொலி கையெழுத்து பிரதி பத்திரிகையை நிறுவினார். அதன்மூலம் கட்சியின் அறிவிப்புகளை வெளியிட்டு வரவேற்பை பெற்றார்.

1953ஆம் ஆண்டு டால்மியாபுரம் ரயில் நிலையத்திற்கு மீண்டும் கல்லக்குடி என்று பெயர் சூட்டக் கோரி தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து கருணாநிதி மேற்கொண்ட போராட்டம் அவருக்கும் தி.மு.க.வுக்கும் பெரும் புகழைத் தேடித் தந்தது.

தமிழக அரசியல் தளத்தில் யார் இந்த கருணாநிதி என்று அனைவரையும் பேச வைத்து, தமிழகத்தின் பிரபலமான தலைவராக பரிணமிக்க செய்தது.

1957ஆம் ஆண்டு முதன்முதலாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1961ஆம் ஆண்டு தி.மு.க. கட்சியின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1967ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக தெரிவுசெய்யப்பட்டார். 1969ம் ஆண்டு முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது முதல் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியையும் வழிநடத்தி வந்தார்.

கருணாநிதி, பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். தமிழகத்தில் 5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்த ஒரே தலைவரும் கருணாநிதிதான்.

அதுமட்டுமின்றி, இதுவரை அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றவர் என்பது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தமிழக சட்டமன்ற வரலாற்றில், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஒரே தலைவர் கருணாநிதி. அதுபோல், தமிழக அரசியலில் 80ஆண்டு காலம் பங்களிப்பை வழங்கிய கருணாநிதி, தி.மு.க. கட்சிக்கு 50 ஆண்டு காலமாக தலைவராக இருந்தவர்.

தமிழக மக்களால் அன்போடு கலைஞர் என்று அழைக்கப்படும் கருணாநிதி, அரசியல்வாதியாக ஆவதற்கு முன்பே கலைஞரானவர். நாடகம், சினிமா என கலைத்துறைக்கும் கருணாநிதி ஆற்றிய பணி அளப்பரியது.

முதல் படம் 1947ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி படம்தான் கருணாநிதியின் பேனா மையின் தீரத்தை இந்த தமிழ் சினிமா கண்டு வியக்க ஆரம்பமாக இருந்தது.

ஜூப்பிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கத்தில் எம்.ஜி.ஆர், நம்பியார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான ராஜகுமாரி படத்திற்கு வசனகர்த்தாவாக கருணாநிதி தனது 20வது வயதில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

பராசக்தியும் பகுத்தறிவும் ராஜகுமாரி படத்திற்கு பிறகு, பல படங்களுக்கு வசனம் எழுதவும், திரைக்கதை எழுதவும் கருணாநிதிக்கு வாய்ப்புகள் குவிந்தன.

பகுத்தறிவு பகலவனாக இருந்த கருணாநிதி சிவாஜியின் அறிமுக படமான பராசக்தி படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், தீத்தெறிக்கும் வசனங்களையும், பகுத்தறிவு ஜோதியையும் தெளிவாக பற்றவைத்தார்.

மறக்க முடியாத மனோகரா எல்.வி. பிரசாத் இயக்கத்தில் 1954ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான மனோகரா படத்தை தமிழ் சினிமா உள்ளவரை யாராலும் மறக்க முடியாது.