நியூஸிலாந்தில் 11 வருடங்களுக்கு பிறகு பொலிஸ் அதிகாரியொருவர் சுட்டுக்கொலை!

dcbd4df0308f46cd8d12dda564107f03

நியூஸிலாந்தின் ஒக்லாந்தில் வழக்கமான போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மற்றொரு அதிகாரி பலத்த காயமடைந்த நிலையில், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடந்த நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, ஆயுதமேந்திய பொலிஸார், ஒரு வீட்டைத் தாக்கி இரண்டு பேரைக் கைது செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு துப்பாக்கிதாரி காரில் தப்பியோடிய போது, கார் மோதியதில் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தில் பொலிஸார் பொதுவாக துப்பாக்கிகளை எடுத்துச் செல்வதில்லை. அத்துடன் கடமையின் போது அதிகாரிகள் கொல்லப்படுவதும் அரிது.

இந்தநிலையில், பொலிஸ் அதிகாரியொருவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமையானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி, கடைசியாக 2009ஆம் ஆண்டு மே மாதம், ஒரு மூத்த உதவி பொலிஸ் அதிகாரி, நேப்பியரில் உள்ள ஒரு வீட்டில் வழக்கமான தேடல் பணியில் ஈடுபட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேற்கு ஒக்லாந்தின் மாஸ்ஸியில், துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பிறகு அங்குள்ள பாடசாலைகள் மூடப்பட்டன.

இதுகுறித்து பொலிஸ் ஆணையாளர் ஆண்ட்ரூ கோஸ்டர், துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது, அதிகாரிகள் ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை என உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்த கட்டத்தில் இந்த வேலை சாதாரணமானதாக இருக்காது என்பதைக் குறிக்க எதுவும் இல்லை.

எங்கள் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் தங்கள் வேலைகளுக்கு செல்லும்போது அவர்கள் எதிர்கொள்ளும் உண்மையான ஆபத்தை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது’ என கூறினார்.

மேலும், பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இந்த மரணம் ‘பேரழிவு தரும் செய்தி’ என கூறினார்.

மேலும், ‘எங்களையும் எங்கள் சமூகங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க எங்கள் பொலிஸ் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைக்கிறார்கள்’ என்றும் கூறினார்.