ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா – மோடியுடன் உத்தவ் தாக்கரே பங்கேற்பார்

modi pm
modi pm

அயோத்தியில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே நிச்சயம் பங்கேற்பார் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இயக்கத்தில் சிவசேனாவின் பங்கு மிக முக்கியமானது என்பதால் அக்கட்சி தலைவரும், மராட்டிய முதல்வருமான உத்தவ் தாக்கரே கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைத்துள்ள நிலையில் ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், ‘அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் உத்தவ் தாக்கரே நிச்சயம் பங்கேற்பார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் சிவசேனா மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது.

சிவசேனாவினர் ரத்தம் சிந்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு தியாகம் செய்துள்ளனர். இந்துத்வாவின் பார்வையில் இந்த விழா வரலாற்று சிறப்பு வாய்ந்தது’ என்று கூறினார்.