சுஜித்தை மீட்க, மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி

surjith
surjith

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இதையடுத்து ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கியதும், பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.

இன்று நான்காவது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இதுவரை 45 அடி குழி தோண்டப்பட்டுள்ளது. மேலும் உள்ள 53 அடிவரை குழி தோண்ட 12 மணி நேரத்திற்கும் மேலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக் இயந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டதால் பாறைகளை உடைக்க போர்வெல் இயந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று மதியம் முதல் போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளை உடைக்கும் பணி தொடங்கியது.

இதற்கிடையே இதுவரை தோண்டப்பட்ட பகுதியில் மீட்பு படை வீரர்களில் ஒருவரை இறங்கி ஆய்வு செய்யப்பட்டது.

சுமார் 70 மணி நேரத்துக்கு மேலாகியும் சிறுவனின் கதி என்ன ஆயிற்றோ? என்ற பதற்றமும் பரபரப்பும் அதிகரித்துள்ளது. மீட்பு பணிக்கான கிணறு தோண்டும் பணி முடிவடைய இன்னும் 10 மணி நேரம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. சுஜித்தை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.