வறுமைக்கு ஆளாகும் பங்களாதேஷ் ஆடைத் தொழிலாளர்கள்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வேலை இழந்த ஆயிரக்கணக்கான பங்களாதேஷ் ஆடைத் தொழிலாளர்கள் வேலை தேட சிரமப்பட்டு வருவதாகவும், அவசர ஆதரவு இல்லாமல் வறுமைக்கு ஆளாக நேரிடும் என்றும் ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து பங்களாதேஷ் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘3.5 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஆடை ஏற்றுமதிகள் இரத்து செய்யப்பட்டன அல்லது நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி 84 சதவீதம் சரிந்தது. குறைந்தது 70,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 4,000 ஆடை தொழிற்சாலைகளில், சுமார் நான்கு மில்லியன் மக்கள் பணிபுரிகின்றனர். இதில் பெரும்பாலும் பெண்களே அதிகம் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கொவிட்-19 தொற்று பரவலுக்கு பிறகு வருமானம் இல்லை.

‘இந்தத் துறை சமீபத்திய வளர்ச்சியைக் கண்டுள்ளது. இரத்து செய்யப்பட்ட 90 சதவீத ஏற்றுமதிகள் மீண்டும் கிடைத்துள்ளன.

இதனால் பணியாளர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்’ என தொழிற்சாலை தலைவர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆடைத் தொழிலாளர்களுக்கு உதவி செய்வதையும் சுட்டிக்காட்டினர்.

இதுகுறித்து பங்களாதேஷ் தொழிலாளர் ஒற்றுமைக்கான மையத்தின் நிறுவனர் கல்போனா அக்டர் கூறுகையில், ‘வேலை இழந்த ஒவ்வொரு 10 தொழிலாளர்களுக்கும் ஒருவர் மட்டுமே பணியமர்த்தப்படுகிறார். இது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்துகிறது. ஏனெனில் அவர்கள் கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக சம்பாதிக்கவில்லை’ என்று கூறினார்.

பங்களாதேஷில் குறைந்தது 364,900 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளும், இன்றுவரை 5,250 இறப்புகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.