தேர்தல் பிரச்சாரத்தில் முகக்கவசத்தை தூக்கி எறிந்தார் ட்ரம்ப்!

65656
65656

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட பிறகு பங்கேற்ற முதலாவது தேர்தல் பிரசாரத்தில் தனது ஆதரவாளர்களை முத்தமிடத் தயார் எனக் கூறி முகக்கவசத்தை தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக இடைவெளி இல்லாமல் புளோரிடாவின் சான்ஃபோர்டில் நடந்த பேரணியில், பெரும்பான்மையானோர் முகக்கவசமின்றி பங்கேற்றனர்.

இதன் போது உரையாற்றிய ட்ரம்ப், ‘நான் இப்போது கொரோனா வைரஸ் தொற்றை கடந்து விட்டேன். நான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவன் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் மிகவும் சக்திவாய்ந்தவனாக உணர்கிறேன்.

உங்கள் அனைவரையும் நான் முத்தமிடுவேன். ஆண்களையும், அழகானப் பெண்களையும் முத்தமிடுவேன்’ எனக் கூறி தனது முகக்கவசத்தை ஆதரவாளர்களை நோக்கி வீசி எறிந்தார். இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் ட்ரம்ப் தொடர்ந்து அலட்சியமாக செயற்பட்டு வருவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உறுதியான நிலையில் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ட்ரம்ப், நான்கு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வெள்ளை மாளிகை திரும்பிய நிலையில் நேற்று மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.