துருக்கியில் புகைபிடிக்க தடை

stop smoking1 1
stop smoking1 1

துருக்கி நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சன நெரிசலான தெருக்களிலும், பொது போக்குவரத்து தரிப்பிடங்களிலும் புகைப்பிடிப்பது இன்று வியாழக்கிழமை முதல் தடை செய்யப்படுவதாக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

குடியிருப்பு வீடுகள் தவிர அனைத்து பொது இடங்களிலும், குடிமக்கள் எந்தவிதமான விதிவிலக்குகளும் இன்றி முகக்கவசங்களை அணிய வேண்டும் என முன்னர் அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற இடங்களில் புகைப்பிடிக்கும் போது சிலர் முகக்கவசங்களை கழற்றி, கீழே இறக்கிவிட்டு சரியாகப் பயன்படுத்துவதில்லை.

இந்நிலையில், இன்று 12 ஆம் திகதி முதல் அனைத்து மாகாணங்களிலும் சன நெரிசலான தெருக்களிலும், பொது போக்குவரத்து தரிப்பிடங்களிலும் புகைப்பிடிப்பதை துருக்கி அரசாங்கம் தடை செய்துள்ளது.

“கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களின் பயன்பாடு மிகவும் முக்கியம். வைரஸ் எளிதில் பரவுகிறது” என உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தை எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் நேற்று புதன்கிழமை புதிதாக 2,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 400,000 ஐ கடந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.