சந்திரனில் மற்றொரு ஆய்வு கருவியை தரையிறக்கியுள்ள சீனா

சீனா, வெற்றிகரமாக சந்திரனில் மற்றொரு ஆய்வு கருவியை தரையிறக்கியுள்ளது.

அதன் ரோபோ இயந்திரமான சாங்கே-5 இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் நிலவில் தரையிறங்கியது.

இந்த இயந்திரம் சந்திரனில் பாறை மற்றும் தூசியின் மாதிரிகளை சேகரிக்கும் நோக்கத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“ஓசியனஸ் புரோசெல்லரம்” என்று அழைக்கப்படும் நிலாவின் பிராந்தியத்தில் உள்ள எரிமலை வளாகமான மோன்ஸ் ரோம்கர் பகுதியில் இது தரையிறங்கியது.

இந்த கருவி எதிர்வரும் இரண்டு நாட்களை அதன் சுற்றுப்புறங்களை ஆராய்ந்து மேற்பரப்புபொருட்களை சேகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கெமரா, ஸ்பெக்ட்ரோமீட்டர், ரேடார், தொலை நோக்கி மற்றும் துரப்பணம் உள்ளிட்ட பலகருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கருவி சுமார் 2 கிலோ “மண்” அல்லது மாதிரிகளை சேகரித்து, பூமிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 44 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறு சந்திரனில் இருந்து மாதிரிகள் பூமிக்குபெறப்படவுள்ளன.

இதற்கு முன்னர் “சோவியத் லூனா 24” மூலம் 200 கிராம் அளவான மாதிரிகள் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.