தமிழக தேர்தலில் வெற்றிபெறாத திரை நட்சத்திரங்கள்

123
123

நிறைவடைந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பெரும்பாலானவர்கள் தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.

தமிழக அரசியலையும், திரை நட்சத்திரங்களையும் பிரித்து அவதானிக்க இயலாது. இவை இரண்டும் புகையிரத பயணத்திற்கு உதவும் தண்டவாளங்களைப்போல், சமூக நீதிக்கும், சமூக மேம்பாட்டிற்கும் இணையானவை.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா தற்போது முதல்வராக பதவியேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அரசியலில் ஒப்பற்ற ஆளுமையாக திகழ்ந்தாலும், இவர்கள் தமிழ் திரையுலகிலும் தங்களின் தனித்துவ முத்திரையை பதித்தவர்கள்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் சின்னத்திரை நடிகரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின், அவருடைய வாரிசும், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக போட்டியிட்டனர்.

இவர்களுடன் உலகநாயகன் கமலஹாசன் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக நடிகை ஸ்ரீபிரியா சென்னை மயிலாப்பூர் தொகுதியிலும், நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பிலும், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்புவும், இயக்குனரும், நடிகருமான சீமான், நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை திருவொற்றியூர் தொகுதியிலும், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக கொமடி நடிகர் மயில்சாமியும் போட்டியிட்டனர். இவர்களுடன் நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் ராஜேந்திரநாத் ஆகியோரும் தேர்தலில் போட்டியிட்டனர்.

இவர்களில் உதயநிதி ஸ்டாலின், மு.க ஸ்டாலின் ஆகிய இருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். ஏனையவர்கள் தோல்வியை தழுவினர்.

இதன் மூலம் மக்கள் மறைந்த திரை உலக ஆளுமைகளை, வெள்ளித்திரை கடந்து அரசியலிலும் ஆதரவளித்தனர். அத்தகைய ஆதரவை அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை பொறுத்துதான் தற்போது ஆதரவளிக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.