25,000 சினிமா தொழிலாளர்களுக்கு நிதி வழங்கிய சல்மான்கான்

12 salmankhan1 300
12 salmankhan1 300

இந்தியாவை கொரோனா 2வது அலை மோசமாக தாக்கி வரும் நிலையில், மீண்டும் நடிகர்கள் உதவிக் கரம் நீட்ட தொடங்கி உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்ட்ராவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.

இதன் காரணமாக பாலிவுட் திரையுலகம் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த நடிகர் சல்மான்கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு நிதி வழங்க முன் வந்துள்ளார்.

கடந்த ஆண்டு பிரதமர் நிவாரண நிதிக்கு அதிக பட்சமாக 25 கோடி ரூபாய் நிதி உதவி அளித்த நடிகர் அக்‌ஷய் குமார் தற்போதும், கொரோனா சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும், வெண்டிலேட்டர்களையும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கி தனது உதவிக் கரத்தை நீட்டி வருகிறார்.

நடிகைகள் டாப்ஸி, ஹூமா குரேஷி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரியங்கா சோப்ரா, அமைரா தஸ்தூர், அனுஷ்கா ஷர்மா, ஆலியா பட் என ஏகப்பட்ட நடிகைகளும் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகளிலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி திரட்டி மக்களுக்கு உதவும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்ட்ராவில் படப்பிடிப்புகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு முழு லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்கள் பசியால் வாடுவதை தவிர்க்க நடிகர் சல்மான் கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு தலா 1,500 வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக சினிமா தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பி.என். திவாரி அறிவித்துள்ளார்.

அதே போல யாஷ் ராஜ் நிறுவனத்திடம் பி.என். திவாரி 35 ஆயிரம் சீனியர் சிட்டிசன் குடும்பங்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தலா 4 பேர் இருக்கும் குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்க யாஷ் ராஜ் நிறுவனமும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பி.என். திவாரி குறிப்பிட்டுள்ளார்.

வரும் மே 13ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சல்மான் கானின் ராதேதி மோஸ்ட் வான்டட் பாய் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இருக்கும் சூழலில் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகவும் அல்லது ஜி பிளெக்ஸ் ஒடிடி தளத்தில் பே பர் வியூவாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.