ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைப் பேச்சு: பா.ரஞ்சித் மீதான வழக்கில் அதிரடி உத்தரவு!

samayam tamil 9
samayam tamil 9

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்போது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் பற்றி விமர்சித்தார். அவரின் இந்த பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதம் எழுந்தது.

பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு சமுக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. பல்வேறு இந்து அமைப்புகளும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்துறையினர் கலவரத்தைத்தூண்டும் விதமாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனுவில், நீலப் புலிகள் அமைப்பு சார்பில் 2019 ஜூன் 5-ல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜசோழன் வரலாறு தொடர்பாக சில தகவல்களைக் குறிப்பிட்டேன். டெல்டா பகுதிகளில் நிலமற்ற மக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து உமர் ஃபாரூக் எழுதிய, ’செந்தமிழ் நாட்டுச் சேரிகள்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததைத் தெரிவித்தேன்.

பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களையே நான் பொதுக் கூட்டத்தில் பேசினேன். எனது பேச்சு சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்டது. நான் எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் பா.ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.