அஜித் பிறந்த நாள், 36 லட்சம் டுவீட்டுகள்

i3 7 1
i3 7 1

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் பிறந்தநாள் மே 1ம் தேதி வருகிறது. அதற்கான கொண்டாட்டங்களை அஜித் ரசிகர்கள் எப்போதோ ஆரம்பித்துவிட்டார்கள்.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தான் இந்த கொண்டாட்டம் களை கட்டியது. நேற்று, நடிகர்கள் சாந்தனு, ஆதவ் கண்ணதாசன் ஆகியோரை வைத்து டுவிட்டரில் ‘காமன் டிபி’ ஒன்றை வெளியிட அஜித் ரசிகர்கள் முடிவு செய்திருந்தார்கள்.

ஆனால், அஜித் அலுவலகத்திலிருந்து அவர்களைத் தொடர்பு கொண்டு அப்படியெல்லாம் எதுவும் செய்ய வேண்டாம். கொரானோ காலத்தில் எந்த கொண்டாட்டமும் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதை சாந்தனு, ஆதவ் இருவரும் ரசிகர்களுக்குத் தெரிவித்தார்கள்.

இருந்தாலும் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தை நிறுத்தவில்லை. அஜித் பிறந்தநாளுக்காக அவர்கள் உருவாக்கிய #ThalaAJITHBdayGalaCDP ஹேஷ்டேக்கை அதிகமான டுவீட்டுகள் மூலம் சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார்கள்.

தற்போது வரை அந்த ஹேஷ்டேக் மூலம் 36 லட்சம் டுவீட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதை இன்னும் அதிகமாக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். மே 1ம் தேதிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. அதுவரையிலும் இதன் சாதனை தொடர்ந்து கொண்டிருக்கும்.