‘அருவா’ – பெயர் மாறுமா ?

i3 4
i3 4

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ள படம் ‘அருவா’. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது.

படப்பிடிப்பு ஆரம்பமாக வேண்டிய சமயத்தில் கொரோனா ஊரடங்கு வந்ததால் ஆரம்பமாகவில்லை. இதனிடையே, இப்படத்தின் நாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. சில முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன.

ஆனால், முதல் முறையாக சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார் வளரும் நடிகையான ராஷி கண்ணா. இது குறித்த தகவலை அவரே நேற்று டுவிட்டரில் ரசிகர்களுடன் சாட் செய்யும் போது தெரிவித்தார்.

இருப்பினும் அவர் ‘அருவா’ என படத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படம் என்றே குறிப்பிட்டிருந்தார். படத்தின் பெயர் ‘அருவா’ என்று முதலிலேயே அறிவிக்கப்பட்ட பின் அவர் படத்தின் பெயரைக் குறிப்பிடாதது ஆச்சரியம்தான்.

ஏற்கெனவே ‘அருவா’ என்ற பெயரில் பாடலாசிரியர் ஏகாதசி ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அப்படம் சில திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் படத்தின் தலைப்பை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

ராஷி கண்ணா படப் பெயரைக் குறிப்பிடாமல் இருப்பதால் ‘அருவா’ படத்தின் தலைப்பை மாற்றுவார்கள் என்றுதான் தெரிகிறது.