‘இந்தியன் 2’ தயாரிப்பில் மாற்றம்

i3 8
i3 8

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இந்தியன் 2’. சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள ஸ்டுடியோவில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பில் மூவர் அகால மரணம் அடைந்ததை அடுத்து படப்பிடிப்பு அப்படியே நிற்கிறது.

அதன்பின் கமல்ஹாசன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என லைக்கா நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு லைக்கா தரப்பிலிருந்தும் ஒரு கடுமையான பதில் தரப்பட்டது. கமல்ஹாசன், ஷங்கர் ஆகியோரின் படங்கள் என்றால் மொத்த கட்டுப்பாடும் அவர்கள் கையில்தான் இருக்கும் என்பது திரையுலகம் அறிந்த ஒரு விஷயம்.

இப்போது அந்த பிரச்சினைதான் ‘இந்தியன் 2’ படம் தொடர்வதில் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்கிறார்கள். படத்தைத் தொடர லைக்கா நிறுவனம் தரப்பில் துளியும் விருப்பமில்லையாம். ஒன்று படத்தை நிறுத்துவது அல்லது வேறு யாருக்காவது படத்தைக் கொடுப்பது என்ற முடிவில் இருக்கிறார்களாம். தற்போது ஒரு டிவி நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை ஆரம்பமாகி உள்ளதாம். அனைத்தும் சரியாக நடந்தால் படம் கைமாறிவிடும் என்கிறார்கள்.

‘இந்தியன் 2’ படத்தை முதலில் தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அறிவிப்புடன் படத்திலிருந்து அவர் விலகினார். பின்னர் தான் லைக்கா நிறுவனம் படத்தை ஏற்றுக் கொண்டது.

‘இந்தியன் 2’ படத்தை லைக்கா நிறுவனம் தொடராத பட்சத்தில் ‘தலைவன் இருக்கிறான்’ படமும் நடக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே, லைக்கா தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்க ஆரம்பமான ‘சபாஷ் பாபு’ கைவிடப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே.