பாடும் வானம்பாடி எஸ்.பி.பி.க்கு இன்று பிறந்த நாள்!

i3
i3

50 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய மக்களை காற்றின் வழியாக ஆட்சி செய்து வரும் பாடும் வானம் பாடி எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவரின் முதல் பாடல் வெளிவருவதற்கு 3 ஆண்டுகள் ஆனது. அதே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரே நாளில் 21 பாடல்களை பாடினார்.

தெலுங்கை தாய்மொழியாக கொண்ட எஸ்.பி.பாலசுப்பிரணியத்திற்கு ஆரம்பத்தில் தமிழ் சரியாக பேசவும் வராது, உச்சரிப்பும் சரியாக இருக்காது. அவர் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து வாய்ப்பு கேட்டபோது, “முதலில் தமிழ் நன்றாக பேச கற்றுக் கொண்டு வா” என்று திருப்பி அனுப்பினார் . ஒரு வருடம் தமிழை சரியாக உச்சரிக் கற்றுக் கொண்டு சென்றார்.

ஹோட்டல் ரம்பா என்ற படத்தில் எம்.எஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து “அத்தானோடு இப்படியிருந்து எத்தனை நாளாச்சு” டப்பாங்குத்து பாடலைத்தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடினார்.

நல்ல வேளை அந்த படமும் வெளிவரவில்லை. பாடலும் வெளிவரவில்லை. அதன் பிறகு சாந்தி நிலையம் படத்தில் வரும் “இயற்கையெனும் இளையகன்னி…” என்ற பாடலைப் பாடினார் .

ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது. இதுவே முறைப்படியான முதல் பாடல் ஆனது.

இந்த பாடல் வெளிவர எஸ்.பி.பி 3 வருடம் போராடினார். அதே எஸ்.பி.பி 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒருரெக்கோர்டிங் ஸ்டூடியோவில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை படைத்தார்.

மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும், இந்தி மொழியில் 16 பாடல்களையும் ஒரே நாளில் பாடி சாதனை படைத்தார். இந்திய அளவில் கிட்டத்தட்ட 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார்.

இன்று அவரின் 74வது பிறந்தநாள். திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூகவலைதளங்களில் அவரை வாழ்த்துகின்றனர். வாசகர்களாகிய நீங்களும் வாழ்த்தலாம்.