பிரசன்னாவுக்கு மின்சார வாரியம் கண்டனம்

i3 4
i3 4

நடிகர் பிரசன்னாவுக்கு கொரோன ஊரடங்குகால மின் கட்டணமாக 70 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. கடந்த காலங்களை விட இது பல மடங்கு உயர்வு என்பதால் கொதித்துப்போனார் பிரசன்னா. “என் வீட்டு மின்கட்டணம் 70 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது.

என்னால் இதை கட்ட முடியும். மின்சார வாரியத்தின் குளறுபடியால் இப்படி அதிகமான கட்டணம் வந்தால் சாதாரண மக்களால் எப்படி கட்ட முடியும். தமிழ்நாடு மின்சார வாரியம் ஊரடங்கு நேரத்தில் கொள்ள அடிக்கிறது என எத்தனை பேர் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர் பிரசன்னா ஊரடங்கு காலகட்டம் நிறைவடைந்த பின்பு மின் கணக்கெடுப்பு என்ற முறையில் கொள்ளை அடிப்பதாகத் தவறான செய்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த கணக்கெடுப்பு முறையானது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படுவதால் நடிகர் பிரசன்னா தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடும் சொற்களால் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்.

பிரசன்னா வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, வழக்கமான நடைமுறை கணக்கெடுப்பு முறையில்தான் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

ஆகவே மின்சார வாரியத்தால் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் பொழுது, நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு அதற்கான வீதப்பட்டியலில் முந்தைய மாத கட்டணம் கழிக்கப்பட்டபின் மின் கட்டண தொகை கணக்கிடப்படுகிறது.

இதைக் கருத்தில் கொள்ளாமல், முந்தைய மாத யூனிட்டை கழிக்காமல் தொகையை மட்டுமே கழிக்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும். பொதுமக்கள் தங்களது கணக்கீட்டு முறையில் சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை அணுகி தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.