சிம்பு திருமணம்: டி.ராஜேந்தர் – உஷா கூட்டறிக்கை

i3 7 3
i3 7 3

நடிகர் சிம்புவின் திருமணம் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அது எப்போதும் உண்மையாக இருந்ததில்லை.

தற்போதும் சிம்பு திருமணம் பற்றி ஒரு செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. லண்டனை சேர்ந்த தொழிலதிபர் மகளை சிம்பு திருமணம் செய்ய இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. தூரத்து உறவினரான அப்பெண்ணை சிம்புவின் பெற்றோர் தேர்வு செய்ததாகவும், கொரோனா முடிவு பெற்றப்பின் திருமணம் நடைபெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் வழக்கம் போல் இதுவும் வதந்தி தான் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சிம்புவின் தந்தை இயக்குனர் டி.ராஜேந்தர், தாய் உஷா ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.

எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.