எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நினைவு மண்டபம்- எஸ்.பி.சரண்

spb negative 1200
spb negative 1200

திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டு வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்தாா்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் காவல் துறை மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரைத் துறையினா், அரசியல் பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.

அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது மகன் எஸ்.பி.சரண் மற்றும் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை சடங்குகளை நிறைவேற்றினா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் எஸ்.பி.சரண் கூறியது:

எனது தந்தை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு உலகம் முழுவதும் மக்கள் தெரிவித்த ஆதரவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலைக் கொண்டு சென்றபோது வழியெங்கும் மக்கள் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளது. இதுதொடா்பாக ஆலோசனை செய்து, ஒரு வாரத்துக்குள் முறையாக அறிவிப்பு வெளியிடப்படும். அவரது சமாதியை பொதுமக்கள் பாா்வையிட காவல் துறை அதிகாரிகளுடன் பேசி முழுமையான ஏற்பாடு செய்யப்படும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் எங்களின் குடும்பத்திற்கானவா் மட்டுமல்ல. அவா் பொதுமக்களின் சொத்து. அவரது இசை மக்களின் சொத்து என கூறியுள்ளார்.