ஈழக் குழந்தைகளின் உளவியலைப் பேசும் நடுகல்- கனக.பாரதி செந்தூரன்

senthuran
senthuran

நடுகல் என்ற சொல் தமிழ்மொழிக்குப் புதிதல்ல. தீபச்செல்வன் என்ற பெயரும் தமிழீழத்திற்குப் புதிதல்ல. ஈழதேசத்தில் முப்பது ஆண்டுகளைக் கடந்த போரியல் வாழ்வின் பல முடிச்சுக்களைத் தனது நடுகல் நாவலில் பூவாய்த் தூவியிருக்கின்றார் கதாசிரியர் தீபச்செல்வன்.

2010 தொடக்கம் 2012 வரையிலான போர் தின்ற கிளிநொச்சி மண்ணின் நிகழ்காலத்தையும் அதற்கு முந்தைய ஏறத்தாள இருபத்தைந்து ஆண்டுகளின் தமிழர் தேசத்தின் வலிய உணர்வுகளையும் ஒன்று திரட்டி எமக்கு எழுத்துக்களாகப் படைத்திருக்கின்றார். நாவலை எழுதி முடிக்கத் தனக்கு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்று முகவுரையில் குறிப்பிட்டுள்ள நாவலாசிரியர்,வினோதன் என்ற பதின்ம வயதுச் சிறுவனூடாகப் போராடிக் களத்திடையே அமரத்துவம் அடைந்த தனது தமையன் பிரசன்னா என்ற போராளி வெள்ளையனது புகைப்படத்தைத் தேடும் சிறியவனின் உளவியலை நாவலாக்கியுள்ளார்.

நாவலின் தொடக்கமே சங்கப் புறநூற் பாடலோடு வீறுநடை போடுகிறது.
“பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி…(புறநானூறு , பாடல் 264)
பலரும் அறிந்த இப்பாடலின் பொருளை அறிந்து கொண்டு எனது விமர்னசவுரையை அறிவது சாலப்பொருத்தமென்று கருதுகிறேன். பகைவர் ஓட்டிச்சென்ற ஆநிரைகளை மீட்டுக்கொண்டு வந்த வீரன் இறந்துவிட்டான் அவனுக்காகப் பரல் கற்கள் அடுக்கி மரல் நார் கிழித்து செவ்விய மாலை சூட்டி நடுகல் நட்டிருக்கிறார்கள்” இரண்டாயிரமாண்டுப் பழைமை வாய்ந்த நடுகல் வழிபாடு தமிழினத்தின் அடையாளம். அதனையே தீபச்செல்வனும் உலகறியச் செய்திருக்கிறார் இந்நாவலூடாக. சிறு வயதிலிருந்தே தமிழீழ விடுதலைப் போராளிகளையும் அவர்களது ஆயுதப் போராட்டங்களையும் விரும்பும் வெள்ளையன் அரும்பு முளைக்கும் முன்னமே போராட்டத்தில் இணைந்து விடுகிறான். அவனின் வீரமரணம் தலைப்பினாலும் கதையின் ஆரம்பத்திலுமே வெளிக்காட்டப்படுகிறது. “காத்துக்கு விளக்கு நூரப் போகுது! சுளகை வடிவாய்ப் பிடி” (பக்கம்-07) என்று தொடங்கும் நாவல் ஏற்றி வைத்த விளக்கின் குறியீடாக மனதில் ஒன்றித்து விடுகிறது.

“இண்டையோட என்டை பிள்ளை வீரச்சாவடைஞ்சு பத்து வருசம்” பெருமூச்செறிந்தாள் அம்மா (பக்கம்-08) சொல்லும் போதே போராட்டத்தில் தம் பிள்ளைகளை அவர்களின் உயிர்களை இழந்த வீரத் தாய்மார்களின் இதயத்தில் எங்கோ ஓர் மூலையில் கசிந்துகொண்டிருக்கும் அன்பு பெருக்கெடுத்துக்கொண்டிருந்தது. பிள்ளைகளுக்காக கடவுளை நினைந்து வழிபடும் அவர்களது ஏக்கம் “அர்ச்சனைச் சீட்டை நீட்ட முன்னமே அர்ச்சகர் “வெள்ளையன் நாமதேசிய” மந்திரம் ஓதத்தொடங்குவார்.(பக்கம்-09) வெளிப்படுகிறது.

நாகபூசனி என்பவள் ஒரு பாத்திரமென சர்வ சாதாரணமாகக் கடந்து சென்று விட முடியாது அவள் முப்பது ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தின் ஒட்டுமொத்தத் தாய்மார்களின் ஓர் உருவமாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். “அம்மா அக் கல்லைக் குளிப்பாட்டுவாள்.அந்தக் கல்லுக்கு விளக்கு வைப்பாள்.உணவூட்டுவாள். அந்தக் கல்லைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அதில் அண்ணாவின் முகம் தெரிகிறதென்பாள்” (பக்கம்-12) ஒரு போர்வீரனை வீரமரணத்தில் ஈன்று கொடுத்த ஒவ்வொரு தாயாரினதும் தாய்மையினதும் வலி அப்பாத்திரத்தால் உணர்த்தப்படுகிறது.

நேசராஜூம் அன்பழகனும் விநோதனுக்கு நண்பர்களாக வந்து குழந்தை உளவியலை, குழந்தை உலகியலைச் சொன்னாலும் அன்பழகன் என்ற பாத்திரம் உண்மையில் இராணுவம் மீதான எழுத்தாளரின் வன்மப் பார்வையாகத்தான் பரிணமித்திருக்கிறது. அன்பழகன் குத்திக்காட்டுகின்ற ஒவ்வொரு அத்துமீறல்களும் இலங்கை இராணுவத்தினருக்கு சாட்டையடியாக ஓங்கி ஒலிக்கிறது. “நரி கெட்ட கேட்டுக்கு நல்லெண்ணைத் தோசை கேட்டிச்சாம்” (பக்கம்-140) போன்ற சாதாரண வசனங்கள் இராணுவ மயமாக்கலுக்கு எதிரான குரலாக ஓங்கி ஒலிக்கிறது.

சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் கொடிய போரால் சிதைக்கபட்ட உண்மையை சுப்பர்சொனிக் என்னும் மிலேச்சத்தனமான போர்விமானக் குண்டுவீச்சுக்க@டாக உணரும் போது இனம்புரியாத கிலியை உண்டு பண்ணிவிடுகிறது. இராணுவப் போர்க் கருவிகளின் எச்சங்களையே வைத்து கல்வி கற்க மேசை, கதிரையை தளமாக்கியிருப்பது உலக வரலாற்றில் தமிழீழத்தின் போரின் மீதான அபிலாசைகளை கண்ணீர் மல்கச் செய்கிறது. கதைக்களமான கிளிநொச்சி நகரமும் அதனை அண்டிய கந்தபுரம்,அக்கராயன், விசுவமடு, பரந்தன்,ஆனையிறவு, ஆனந்தநகர் முதலிய கிராமங்கள் அடிக்கடி போரால் விழுப்புண்ணடைந்து மீளும் போராளியாகத் தன்னை நிலை நிறுத்துகிறது. பொன்னையன் கிழவன் நுவரெலியத் தமிழ்வாடையோடு போராட்டத்திற்கு முண்டு கொடுப்பது மலையக மக்களுக்கும் இலங்கை நாட்டில் போரியல் தேவை ஒன்று இருந்தது அத் தேவை விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டது என்பதற்குச் சான்றாய் அமைந்தது.

சிங்கபண்டார, பெயரிலேயே மனித மாமிச இரத்த வாடைக்காரனாக விளங்ககிறான். வெள்ளைச்சி கொலையாகட்டும் நாகபூசணியை அடிக்கடி வம்பிழுப்பதாகட்டும் “ பயங்கர வாதிகளுக்கு விளக்கு வச்சு உயிர் குடுக்கேலாது” (பக்கம்-190) போன்ற தொனிகள் போராட்டக்காலத்தில் தமிழர்களுக்கு ஆமி மீது இருந்த பயம், காழ்ப்புணர்வு, பழிவாங்கும் எண்ணங்களை பாரதியார் பாணியில் சொல்வதென்றால் காறி உமிழ்ந்திருக்கின்றார் தீபச்செல்வன். ஒரு விடுதலை தேசத்திற்காக ஏங்கி நிற்கும் பிஞ்சு மனத்தினனுக்குத் தன் சாவு கூட வருத்தமளிக்காதவாறு நடுகல்லைக் கொண்டு செல்லும் எழுத்தாளர் பதின்ம வயதுச் சிறார்களை புலிகள் ஆயுதப் பயிற்சி கொடுத்து அழிக்கிறதென்ற ஐ.நா சபையினதும் இலங்கை அரசினதும் குற்றச்சாட்டுகளுக்கு பிடிகொடுத்துள்ளதோ என்ற சந்தேகமும் இங்கே எழாமலில்லை.

புலிகள் அமைப்பின் கட்டுப்பாடான அரசியலும் பிற நாடுகளை பிரமிக்கவைக்கும் சட்டதிட்டங்களும் பெண்களுக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவமும் போரக்;காலத்தில் மக்களைக் காக்கும் நேர்த்தியும் நாவலைப் படிக்குந்தோறும் கண்களை அகலவிரியச் செய்து அவ்வமைப்பின் மீதான மரியாதையைக் கூட்டுகிறது.

சனல்04, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்,செஞ்சோலை மாணவர் படுகொலை முதலிய போர்க் கொடுமையின் எச்சங்களை வாசிக்கையில் கண்ணீர் ஒரு பீரங்கிக் குண்டுபோல அழுகையோடு வெடித்துக்கொண்டு வெளிவருகிறது. “எங்கடை பிள்ளையளின்ட கல்லறைகளை அழிச்ச பயங்கரவாதிகள்” (பக்கம் -141) என்று தழிழீழப் பெண்கள் இராணுவத்திற்கு எதிராகக் கோசமிடுகையில் சிங்கள மக்களுக்கே தமது இராணுவத்தின் மீதான வெறுப்பு ஏற்படும் என்பது திண்ணம். சிங்கள மொழியில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட வேண்டும் அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டால் சிங்கள இராணுவத்தின் போர்க்கால அத்துமீறல்களின் உண்மை முகம் புலப்பட்டு சாயம் கழறும். “முட்கம்பிகள் மாத்திரம் வாதை தருவதல்ல….. மலக்குழிகளும் வாதைதான்” (பக்கம்-152) போன்ற வசனநடைகள் 2009ஆம் ஆண்டு போரின் மௌனத்திற்குப் பின்னரான தமிழ்மக்களின் அவல வாழ்வைச் சித்திரிக்கிறது. சலுகைகளுக்காக விலை போன சில விபீசணர்களையும் நடுகல் தோலுரித்துக்காட்டியிருக்கிறது.

அண்ணன் வெள்ளையனின் புகைப்படத்திற்காகத் தமிழீழத் தேசத்தின் பல அந்தங்கள் ஈறாகப் பயணிக்கும் வினோதன் தான் தேடலில் முயற்சிக்கும் ஒவ்வொரு இடத்திலும் போர் வடுவை, அடக்குமுறைகளைக் காண்கிறான் உண்மையில் வினோதனாக எழுத்தாளர் தீபச்செல்வனின் மனம்தான் நடமாடுகிறது என்பது அவரின் சொல்லாடல்கள் வாயிலாகப் புலப்படுவதால் தன்னுணர்ச்சி நாவலாகத்தான் நடுகல்லும் படைக்கப்பட்டிருக்குமோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றுகிறது. “இருட்டுக்குள் தீயைப்போல மிதக்கும் செம்பருத்தம் பூக்கள்”, கரை புரண்டு பாயும் வெள்ளத்தில் நுரைக் கட்டிகள் பூக்கொத்தைப் போலிருக்கும்” முதலிய உவமை உருவகங்களால் கவிதை நடையால் நாவலின் தரம் மிளிர்கிறது. ஈழத்தமிழருக்கே உரித்தான உச்சரிப்புக்களும் மிதிவெடி, கடாபி போன்ற போர்க்கால ஞாபக உணவு வகையறாக்களுமென முப்பது ஆண்டு கால வாழ்வை முடிந்தவரை ஒன்றினைக் கூட கைவிட்டு விடாது வெளிப்படுத்தியிருக்கிறார் அதிலும் குறிப்பாக “திரைப்பட ரசிகர்களுக்கோர் அன்பான வேண்டுகோள்….. வண்ணத்துப்பூச்சி இறக்கை அடித்துப் பறந்தது என்பது தணிக்கைப் படுத்தப்பட்ட புலிகளின் திரைப்படப்பிரிவின் ஒழுக்க வரலாற்றை போதித்த முறைமையை விளக்கியுள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் மக்களின் மனதிலிருந்து மற(றை)க்கப்படும் போராட்ட வாழ்வை நடுகல் மூலமாக மீண்டும் நட்டிருக்கிறார் எழுத்தாளர் என்பதுதான் உண்மை. தீபச்செல்வனின் எழுத்துகளுக்கும் அவரின் துணிச்சலான கதை சொல்லும் பாங்கிற்கும் சேர்த்து ஒரு சல்யூட் அடித்து நாமும் கண்ணீர்ப் பூக்களை மாவீரர்களின் நடுகற்கள் மீது சொரிவோமாக.

எழுத்தும் விமர்சனமும்- கனக.பாரதி செந்தூரன்.