‘அவள்’ – சர்மிலா வினோதினி (சிறுகதை)

Aval sirukathai
Aval sirukathai

தான் ஊற்றிக்கொண்டு வந்த இஞ்சித் தேநீரை சுவைத்துப் பருகியபடி

நல்லா இருக்கா?  நான் ஊத்தின பிளேன் ரீ ?

என்று தன்னுடைய பாணியில் கேட்ட தாரகையின் முன்னே வெற்றுத் தேநீர்க் கோப்பையை வைத்தேன். 

ஓம் நல்லா இருந்திச்சு. இந்த பிளேன் ரீய தந்த கரங்களுக்கு பரிசா நீங்க கேட்ட கதைய சொல்லலாம் எண்டு இருக்கிறன். 

பதில் சொல்லியபடி தாரகையின் முகத்தைப் பார்த்தேன். 

நீண்ட நாட்களாகக் கதைகேட்டுத் தொல்லைப்டுத்திய தாரகையின் முகம் பிரகாசமாகியது.

சரி அப்ப சொல்லுங்க பிளீஸ் 

இதற்கு மேலும் அவள் பொறுத்துக்கொள்ள மாட்டாள் என்பது தெளிவாகப்புரிந்தது.

நான் இப்படித் தொடங்கினேன். 

துயரத்தை சுமந்தலையும் ஈரப்பனி 

உன் தலைமீது வீழ்கின்ற நாளில் 

வந்துவிடுவேனெனச் சொல்லிவிட்டுச் சென்றவளை 

வெய்யில்தான் தின்றிருக்க வேண்டும்.

செரித்துக் கொட்டுகின்ற ஏப்பத்தின் வாடையில் 

காய்கிறது வெற்றுத்தலை 

இந்த வரிகளை நான் வாசித்துக் கொண்டிருந்தபோது அன்றைக்கு நீ முதன்முதலாக அசைவினைக்காட்டினாய். உன் பிஞ்சுக்கால்களால் என் வயிற்றில் முட்டினாய். வெற்றிடங்கள் நிறைந்திருந்த என் பொழுதுகளில் என்றைக்குமாக நீ நிறைந்திருப்பாய் என்கின்ற நம்பிக்கை அன்றைக்கு என்னை நிறைத்தது. கண்கள் பனிக்க நாட்களை எண்ணிக்கொண்டிருந்தேன். 

என்னுடைய காத்திருப்பை நீ பொய்யாக்கவில்லை. நான் விரும்பியதைப்போலவே என்னுடைய பொழுதுகளை உன்னுடையதாக ஆக்கிக்கொண்டாய். சில சமயங்களில் சில புத்தகங்களை நான் வாசித்துக்கொண்டிருக்கையில் கைகளைத்தட்டி கவனம் கோரினாய். இன்னும் சில வேளைகளில் அமைதியாகத் தூங்கினாய். சூரிய சந்திர கிரகணங்களின் பின்னரான இரவொன்றில் எழுகின்ற நிலவைப்போன்றிருக்கும் உன்முகத்தை மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டு இருப்பேன். 

உன் வெளிப்பாடுகளுக்கு ஏற்ப புத்தகங்களைத் தெரிவுசெய்து வாசிக்கத்தொடங்கினேன். நீ மடியில் விளையாடிய நாட்களிலிருந்து கைப்பிடித்து நடந்துசெல்லும் நாட்கள் வரை நான் சொல்லும் கதைகளின் உலகம்தான் உன்னுடைய மாளிகையாக இருந்தது. 

சுயமாக ஒடி விளையாடுகின்ற பருவத்தில் உன்னை காணவில்லை என்று தேடினால் நீ என்னுடைய புத்தக அலுமாரியினுள் ஏறியிருந்து விளையாடிக்கொண்டிருப்பாய். அதற்குள் இருந்த சில புத்தகங்களின் பழைய வாசனை உனக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்தேன். 

ஒருநாள் அந்த அலுமாரியிலிருந்து உன் தாத்தாவின் திருக்கணித பஞ்சாங்கம் ஒன்றை எடுத்துக்காட்டினாய். மறுநாள் செங்கை ஆழியனின் கிடுகுவேலி நாவலை எடுத்து வந்தாய். எட்டி எட்டி நடந்தபடி புத்தகத்தை நீ கொண்டுவந்த அழகை தலையைச் சரித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது அதற்குள்ளிருந்த அந்தப்புகைப்படம் கீழே விழுந்தது. 

கதையை நான் சொல்லிக்கொண்டிருக்க தன்னுடைய தலையை இன்னும் முன்புறமாக நகர்த்தி உன்னிப்பாகக் கேட்கத் தொடங்கினாள் தாரகை. 

நான் தொடர்ந்தேன். 

நீ புத்தகத்தை கீழே போட்டுவிட்டு அந்தப் புகைப்படத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஓடி வந்தாய். அது நானும் ஆதிராவும் சேந்து எடுத்த புகைப்படம். 

அந்தப்புகைப்படத்தை தொட்டுக்காட்டி உன்னுடைய மொழியில் எதை எதையோ சொல்ல முயன்றாய். எவ்வளவு முயன்றும் உன்னுடைய மொழியின் அர்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீயோ என்னை விடுவதாக இல்லை. 

சற்றே நிறம்மங்கி காலத்தை தன்னுள் ஏற்றியிருந்த அந்தப்புகைப்படத்தை மீண்டும் அலுமாரியினுள் வைக்க வேண்டாம் என்று அடம் பிடித்தாய். அழுதாய். அந்தப்புகைப்படத்துடனேயே அன்றிரவு உறங்கியும் விட்டாய். 

நீ தூங்கிக்கொண்டிருந்த அன்றிரவு நான் விழித்திருந்தேன். தூக்கம் இழந்ததால் கடுமையான தலைவலி ஏற்பட்டது. கண்கள் சிவந்து நீர் வடிந்தது. நீண்ட நாட்களின் பின்பு அன்றைக்கு நான் அழுதேன். இரவு முழுவதும் தனித்திருந்து அழுதேன். 

அன்றைய  இரவின் அழுகையைப்போல அதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அப்படி அழுததாக ஞாபகம்.

கதை கேட்டுக்கொண்டிருந்த தாரகையின் கண்களில் ஒருவித கவலை தோய்ந்திருந்தது. இருந்தாலும் அவள் என்னை விடுவதாக இல்லை என்பதைப் புரிந்துகொண்டு மேலும் தொடர்ந்தேன். 

ஆதிராவும் நானும் பார்ப்பதற்கு ஒரு வகுப்புத்தோழிகள் போலவே இருந்தோம். பழகினோம். ஆனால் அவள் என்னைவிட இரண்டு வயது இளையவள்.  எங்களுடைய வீட்டிற்குப் பின்திசையில்தான் அவளுடைய வீடும் இருந்தது.

எங்களுடைய வீட்டு வளவின் பின் வேலியையும் ஒரு வெற்று வளவையும் தாண்டினால் அவர்களின் வீட்டிற்குச் சென்றுவிடலாம். எங்களுடைய வீட்டின் சமையலறையில் இருந்து பார்த்தால் அவர்களுடைய வீட்டின் முன்பகுதி இலகுவாகக் கண்களுக்குப் புலப்படும். 

நாங்கள் இருவரும் வெவ்வேறு பாடசாலை என்றாலும்ல கூட ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் சந்தித்து உரையாடுவது வழமை. மாலைநேர வகுப்புக்களுக்குச் சென்று வந்த பின்னர் பள்ளிச் சீருடை தோய்க்கின்ற போது கிணற்றடியில் இருந்து கொண்டு கதை கதையாய் கதைத்துத் தள்ளுவோம். எங்களுக்குள் அவ்வளவு நேசம் இருந்தது. 

நட்பிருந்தது. 

அப்பா. அதுதான் உன்னுடைய அம்மப்பாகூட அடிக்கடி கேட்பார்.

ரெண்டுபேருக்கும் கதைக்காட்டி பத்தியப்படாதோ? அப்பிடி என்னதான் கதைக்கிறியள்? 

அப்படி எதைக்கதைத்தோம் என்று இப்போது சிந்திக்க சிரிப்புத்தான் எழுகிறது. ஏதோ கதைத்தோம். 

கிணற்றடிப் பூவரசின் காற்றும் எங்களுடைய கதையும் சிரிப்புமாக நகர்ந்தன காலங்கள். நினைவுகளில் எழுந்து நின்று முல்லைப்பூச்சொரியும் மாலைகள் அவை. 

இப்பொழுது தாரகை சிரித்துக்கொண்டு கதைகேட்டாள். அவளுக்கும் அந்தக்கதைகள் இதமாய் இருந்திருக்க வேண்டும். 

அவேட வீட்டுக்கு கிழக்கால நிண்ட கூழன் பிலாமரத்தடியிலதான் பங்கர் வெட்டி வச்சிருந்தம். அப்பாவும் தாரகையின்ர அண்ணாவும் சேர்ந்துதான் அத வெட்டினவே. 

வெட்ட வெட்ட அள்ளிக்கொட்டினது நாங்கள்தான். நல்ல புழுதி மண்ணில கால் புதைய அள்ளி அள்ளிக் கொட்டினம். அப்பேக்க என்ன கனக்க பாரம் தூக்க விடேல்ல அவள். நான் பாவம் எண்டிற்றாள். 

பகர வடிவில இருந்த அந்த பங்கரின்ர இரண்டு பக்கத்திலயும் வாசல் இருந்திச்சுது. அவசரத்துக்கு  ஓடிப்போய் உள்ள இறங்கக்கூடிய மாதிரியும் வெட்டி இருந்தம். 

உள்ளபோய் இருந்தா வெளிய தெரியாது. பிலா மரக்கொப்புக்கள் மறைச்சிரும். செல் குத்துற சத்தம் கேட்டாலோ இல்ல கிபிர்ட சத்தம் கேட்டாலோ ஓடிப்போய் முதல் ஆக்களா அதுக்குள்ள இறங்கீருவம். 

கதை கேட்கும் ஆர்வம் அதிகரிக்க தான் இருந்த கதிரையை எனக்கு முன்பாக இன்னும் சற்று நெருக்கமாக இழுத்துப்போட்டுக்கொண்டாள் தாரகை. இப்போது அவளுடைய விழிகளுக்குள் என்னுடைய முகம் தெரிந்தது. 

சரி சொல்லுங்கோ. என்பதாய் இருந்தது அவளுடைய ஆர்வம். 

நான் தொடர்ந்தேன்.

எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அண்டைக்கு ஒரு சனிக்கிழமை. ஏ எல் எக்சாம் நெருங்கீற்று இருந்திச்சுது அப்பாட ஆய்க்கினை தாங்காம கொப்பிய எடுத்து வச்சுக்கொண்டு இருந்தன்.  குசினிக்க இருந்து நல்ல வாசம் வந்துது. அம்மா மாங்காய்ச்சொதி வச்சுக்கொண்டிருந்தா. ஆதிராக்கு மாங்காய் சொதி எண்டா உயிர். சோத்துக்கு சொதியும் சொதிக்கு சோறும் எண்டு மாறி மாறிச் சாப்பிடுவாள். 

திடீரெண்டு காதப்பிளக்கிறமாரி சத்தம். 

பலாலியில இருந்து கிபிர் விமானம் வந்து கொட்டீற்று போய்ற்றுது. அனேகமா வந்து ரெண்டு சுத்து சுத்தித்தான் போடுவாங்கள். சனியனுகள் அண்டைக்கு வந்ததே தெரியாம சத்தத்த குறைச்சு சடாரெண்டு வந்ததுதான் தாமதம் கொட்டீற்றுப் போட்டாங்கள். 

நடந்து முடிஞ்சபிறகுதான் தெரிஞ்சுது.  

சொதிச்சட்டி அடுப்பில இருந்து துள்ளி விழுந்து கீழ கிடந்திச்சு. 

அம்மா ஓடியா ஓடியா எண்டு என்ன இழுத்துக்கொண்டு பிலாமரத்தடிக்கு ஓடினா. 

ஒரே புகை மூட்டம்.

பங்கர காணேல்ல. 

ஆதிராவின்ர அறுபட்ட தலைமுடி பலா மரத்தின்ர பதிஞ்ச கொப்பு ஒண்டில தொங்கிக்கொண்டு இருந்திச்சு. ஊர்ச்சனம் எல்லாம் ஒடி வந்துதுகள்.

கட கடவெண்டு கையால விறாண்டி மண்ண தள்ளிச்சினம். பிறகு ஓடிப்போய் மண் வெட்டியால மண்ண வழிச்சு மண்மூடியிருந்த பங்கர தோண்டியெடுக்க முயற்சி செய்திச்சினம்.   

குண்டு விழுந்த குழி அதுக்குப்பக்கத்தில ஆவெண்டு பாத்துக்கொண்டிருச்திச்சு. அந்தக் குழியில விழுந்து மறஞ்சுபோயிரலாமோ எண்டுதான் எனக்கு இருந்திச்சு. 

நான் உன்னோட எப்பயும் இருப்பனடி…

ஒரு நாள் கிணற்றடியிலிருந்து போகும் போது ஆதிரா சொன்ன வார்த்தைகளை இழுத்துப்பிடித்துக்கொண்டு அவ்விடத்திலேயே நின்றேன். 

இவள அங்கால போகச்சொல்லுங்கோ. 

தோண்டிக்கொண்டிருந்த யாரோ கத்தியது தூரத்தில் கேட்டது. 

நான் அசையவில்லை. 

ஆதிராவின் மீதித் தலைமுடி தெரிந்தது. முகமெல்லாம் மண் அப்பியிருக்க வாயிலிருந்து இரத்தம் வடிந்த இடத்தில் கூடுதல் மண் அப்பியிருந்தது. வைத்தியசாலைக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். எப்போதும் அவளுடைய காலில் சலசலக்கும் கொலுசுகளில் ஒன்று எங்கோ அறுபட்டு விழுந்திருக்கவேண்டும். ஒற்றைக்கொலுசு மட்டும் தொங்கிக்கொண்டிருந்தது. 

கிணற்றடி வெறுமையாகியது. பூவரசம் காற்று எரிச்சலூட்டியது. கூழன் பலாப்பழம் புளித்தது. பள்ளிச் சீருடை தோய்ப்பதை நிறுத்தினேன். அடிக்கடி கிணற்றடிக்கு போகத்தொடங்கினேன். ஆதிரா என்னைத்தேடி வருவாள் என்று நம்பினேன். 

நாட்கள் ஒரு குழந்தையின் வளர்ச்சியென ஒடிக்கொண்டிருந்தன. ஒருநாள் ஆதிராவினுடைய குரல் எனக்குக் கேட்டது. நான் கேட்பதற்கு அவள் பதில் சொன்னாள். கிணற்றுக் கட்டிலிருந்து கதைக்கத் தொடங்கினேன்.  

ஊரார் என்னை பைத்தியம் என்றார்கள். எனக்குச் சிரிப்பு வந்தது. சத்தமாகச் சிரித்தேன். வீட்டிலிருந்து அடிக்கடி கிணற்றடியை நோக்கி ஓடினேன். அங்குதான் அவள் இருப்பதாக நம்பினேன். அப்பா என்னை இரக்கத்தோடு பார்த்து ஏதேதோ சொல்ல முற்பட்டார். 

அவரும் சோர்ந்திருக்கவேண்டும். 

சகித்துக்கொள்ள முடியாமல் வேலையை மாற்றிக்கொண்டு இந்தக் கிராமத்திற்கு அழைத்து வந்தார். நான் தனித்துப்போனேன். கதிர் வெட்டிய பின்பு இங்கு தனித்திருக்கின்ற வயல்களிலும் வரப்புக்களிலும் நடந்து திரிந்தேன். காற்றுக்கு கதை சொன்னேன். அந்தக் கதைகளை கிணற்றடியிலிருக்கும் ஆதிராவும் கேட்கமுடியும் என்று நம்பினேன். நடந்தேன். தொடர்ந்து நடந்து திரிந்தேன். உடல் சோர்ந்து உறங்கினேன். உறங்குகிறபோது என் தலைமீது ஏதே சில பச்சிலைகளை வைத்து வைத்தியம் செய்திருக்க வேண்டும். 

காலநகர்வில் ஆதிராவின் குரல் என்னிலிருந்து மறையத் தொடங்கியது. முனகி முனகி அனுங்கிக்கொண்டிருந்த அவளுடைய சத்தம் முற்று முழுதாகக் கேட்காமற்போன நாளில் அழுது தீர்த்தேன். 

நீ புகைப்டத்தோடு உறங்கிய நாளில் அழுத அழுகைப்போன்றது அந்த அழுகை.  

நீண்ட நாட்களின் பின்பு அன்றைக்கு உன் அம்மப்பா நின்மதியாக உறங்கியதாகப் பின்னர் சொன்னார். 

இப்படியே நாட்களும் ஓடி மறைந்துவிட்டன. அன்றைக்குப் பணியிடத்தில் உன்னைப்போன்ற இன்னுமொரு சிறுமியைச் சந்தித்தேன். அவள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்துகொண்டிருந்தாள். அவளுடைய தோற்றமும் உடல் மொழியும் அவள் பசித்திருக்கிறாள் என்பதைக்காட்டியது. 

சாப்பிட்டயா? என்று கேட்டேன். 

இல்லை என்று தலையாட்டினாள்.

என்னுடைய உணவை கட்டாயப்படுத்தி உண்ணவைத்தேன். அவளுடன் பேச்சுக்கொடுத்தேன். அவளுக்கு அவளுடைய தாத்தாவின் பெயரைத்தவிர வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. 

திடுக்கிட்டேன். நீ என்னிடம் அடிக்கடி ஆதிராவின் புகைப்படத்தைக்காட்டி கதைகேட்பது நினைவில் ஓடியது. உனக்குக் கதை சொல்வதென அன்றைக்குத் தீர்மானித்தேன். 

தாரகை எழுந்து வந்து என்னை இறுகக் கட்டிக்கொண்டாள். 

என்ன அங்க கூட்டீற்றுப்போங்கோ பிளீஸ். 

அழுத்தமாகவும் கெஞ்சுதலாகவும் வெளிவந்தன வார்த்தைகள். 

ஒரு சில நாட்களில் வீட்டிலிருந்தோம். அப்பாவின் மங்கிய பார்வையைப்போல நிறமிழந்திருந்த வீட்டின் சாவியை கொண்டுவந்து தந்துவிட்டுப்போனார் சித்தப்பா. ஒட்டடை படிந்திருந்த சுவர்களில் சிலந்திகள் கூடு பின்னியிருந்தன. 

வாழ்க்கை எவ்வளவு மாறிப்போயிருக்கிறது. வாழ முடியாத வாழ்வின் பக்கங்கள் என்றால் அதை எதற்காகக் காட்டுகிறது இந்த வாழ்க்கை? காலத்திற்கும் அதை நினைத்துக்கொண்டு வேறோர் வாழ்வை வாழ்ந்து முடிப்பதற்கா? 

தூசி படிந்திருந்த சமயலறையின் யன்னலை தட்டித் திறந்தேன். அந்தி ஒளியில் மங்கலாகத் தெரிந்தது கிணற்றடி. இலைகளை இழந்திருந்த பூவரசு தன் இருப்பின் அடையாளமாக அடிமரத்தை மட்டும் வைத்துக்கொண்டிருந்தது. அதனருகே கறையான் புற்று ஒன்றும் எழும்பியிருந்தது. 

மாலையில் ஆதிரையின் வீடிருந்த இடத்தை தேடும் முயற்சியில் பற்றைகள் எழும்பியிருந்த பின் வளவைத்தாண்டி பலா மரத்தைத் தேடினோம். பகீரதப் பிரயத்தனம் செய்து பட்டுப்போன அதன் அடியை கண்டு கொண்டேன். 

தாரகை அந்தப் பலாவின் அடியைத் தொட்டுப்பார்த்தாள். காய்ந்திருந்த செடிகளை விலத்தி விலத்தி ஓரம் கட்டியபடி கைகளால் மண்ணைக் கிண்டினாள். தேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் ஒருவருடைய தேடலைப்போன்றிருந்தது அவளுடைய செய்கை. 

யோசனையோடு அவளைப் பார்த்தேன். 

இடது கையைப்பற்றிக் கீறிய சூரப்பத்தை ஒன்றின் முட்களை விலத்திக்கொண்டு போவம் என்றேன். 

கையிலிருந்து இரத்தமும் தோலின் நீரும்  சேர்ந்து கசிந்தது வெளியேறியது. 

சரி என்று தலையாட்டிய தாரகை கிணற்றடியை நோக்கி நடக்கத் தொடங்கினாள். 

நானும் அவளைப் பின்தொடர்ந்தேன். 

பாதை தெரிந்தவளைப்போல பற்றைகளை விலத்தி விலத்தி மிக லாவகமாகச் சென்று கொண்டிருந்தவளின் காலிலிருந்து தெறித்த ஒளிக்கற்றை என்னுடைய முகத்தில் விழுந்தது.

ஒளியெழுந்த திசையை பார்த்தேன். 

அவளுடைய ஒற்றைக்காலில் ஒரு கொலுசு மின்னிக்கொண்டிருந்தது. 

-தமிழ்க்குரலுக்காக சர்மிலா வினோதினி