மேஷ ராசியினரது சனி பெயர்ச்சியின் பலன்கள் 2023

pic
pic

வீரமான மேஷ ராசியினரே இதுவரை ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற சனிபகவான் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். தனது 3ம் பார்வையால் ராசியையும் 7-ம் பார்வையால் 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 10-ம் பார்வையால் 8-ம் இடமான ஆயுள், வம்பு, வழக்கு ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

சுப லாபச் சனியின் பலன்கள்: ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் பொற்காலம் என்று சொல்லக் கூடிய காலம் கோச்சாரத்தில் உப ஜெய ஸ்தானமான 3,6,11-ம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் காலம். இப்பொழுது அந்த பொற்காலம் மேஷ ராசிக்கு ஆரம்பமாகி விட்டது. கருத்து வேறுபாட்டால் பேசாமல் பிரிந்து இருந்த சித்தப்பா, மூத்த சகோதரம் பகைமை மறந்து நட்பு பாராட்டுவார்கள். தொழில் ரீதியாக உறவுகள் ரீதியாகவும் அனுபவித்த மன சங்கடங்கள் விலகும். இந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மகாலஷ்மியின் கனிவுப் பார்வை உங்கள் மேல் உள்ளதால் சனி பகவான் தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி லாபத்தில் திளைக்க செய்யப் போகிறார்.

பொருளாதார நிலையில் மிக உன்னதமான நிலையை அடைவீர்கள்.கடனால் பட்ட கவலைகள், அவமானம் அகலும்.பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது மேன்மையான காலம். அதிகாரப் பதவிகள் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சொந்த தொழில் ஆரம்பிக்க விருப்புபவர்களுக்கு விரும்பிய தொழில் வாய்ப்பு தேடி வரும். புதிய தொழில் தொடங்க, தொழில் கிளைகள் திறக்க, தொழிலை விரிவு செய்ய ஏற்ற நேரம். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அரசின் திட்டங்கள், மானியம், உதவி தொகை கிடைக்கும். தொழிலாளர்கள் நட்பு கரம் நீட்டி உற்பத்தியை பெருக்குவார்கள்.

தொழில் கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். புதிய தொழில் கூட்டாளிகள் , ஒப்பந்ததாரர்கள் கிடைப்பார்கள்.வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். இது மிகப் பொன்னான காலம். முன்பு ஏற்பட்ட நஷ்டங்கள் இப்பொழுது பணமாக காய்க்கும்.உயர்கல்வி, மருத்துகல்விகள், ஆராய்ச்சி சார்ந்த கல்விகள் ஐஏஎஸ், ஐபிஎஸ், பிடிஎச் போன்ற கல்வி பயில சிறப்பான காலம்.

3-ம் பார்வை பலன்கள்: லாபஸ்தானத்தில் நிற்கும் சனியின் 3ம் பார்வை ராசிக்கு இருக்கிறது. இளைய சகோதர வழியில் பொருள் உதவி வந்து சேரும். சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து நல்லிணக்கம் ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும். அதிக அலைச்சல் மிகுந்த பயணங்கள் செய்ய நேரும். சிலர் தொழில் அல்லது வேலைக்காக இடம் பெயரலாம்.கை மறதியாக வைத்த நகைகள், சொத்து பத்திரங்கள் கிடைக்கும். எல்லைத் தகராறு நீங்கும், பாகப்பிரிவினை சுமூகமாகும். சிலருக்கு தலைவலி, ஞாபக மறதி அல்லது காது, மூக்கு தொண்டை, நரம்பு தொடர்பான பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு மந்த தன்மையோடு எதிர்மறை சிந்தனையும் தோன்றி மறையும். ஆனாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம்.சிலருக்கு தகவல் தொடர்பு மீடியா மூலம் பெயர் புகழ் பரவலாம்.

7-ம் பார்வை பலன்: சனியின் 7-ம் பார்வை ராசிக்கு 5-ம் இடமான பதவி ஸ்தானம், புத்தி ஸ்தானம் , பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்தி கூர்மை , தெய்வ அனுகிரகம் பற்றி கூறும் இடத்தில் பதிகிறது. இந்த இடத்திற்கு ஏப்ரல், 22, 2023 முதல் ஒரு வருட காலத்திற்கு குருப் பார்வையும் இருப்பதால் கௌரவ பதவிகள் தேடி வரும்.குல, இஷ்ட, தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். குடும்பத்திற்கு குல தெய்வ அருள் கிடைக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும்.நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் தலை தூக்கினாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகும். குல தெய்வம் தெரியாதவர்களுக்கு குல தெய்வம் பற்றிய தகவல் கிடைக்கும். குழந்தைகளுக்கு திருமணம், கல்வி, புத்திரப் பேறு, உத்தியோகம், தொழில் போன்ற சுப பலன்கள் அதிகரிக்கும். அதற்கான சுப விரயங்களும் உண்டாகும். சிறு சிறு உட்பூசலுக்காக வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

10ம் பார்வை பலன்கள்: சனியின் 10ம் பார்வை அஷ்டம ஸ்தானத்திற்கு இருப்பதால்மறைமுக வழிகளில் இலாபங்கள் பெருகி உங்களைத் திக்கு முக்காடச் செய்யும். இன்சூரன்ஸ், ஏலச்சீட்டு, வங்கி டெபாசிட் முதிர்வு தொகை, லாட்டரி, ரேஸ், திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து கைக்கு கிடைக்கும்.ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிட்டும். சிலருக்கு சிறிய முயற்சியில் கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும். ஆயுள் தீர்க்கம். ஆனால் முன்னோர் வழி கர்ம வினை தாக்க நோய் ஆரம்பமாகும் அல்லது அதிகமாகும். உடல் அசதி உருவாகும்.

சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை: ராசி அதிபதி மற்றும் அஷ்டமாதிபதியாகிய செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் காலம். ராசிக்கும், எட்டாம் இடத்திற்கும் சனிப் பார்வை உள்ளது என்பதால் நிதானத்துடன் செயல்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தை , ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. வரவு இல்லாமல் இருந்தால் இருந்தால் கூட பரவாயில்லை. முதலுக்கே மோசமாக முடியும் என்பதால் கவனம் தேவை. பிறருக்கு ஜாமீன் போட்டால் கடன் தொகைக்கு நீங்களே பொறுப்பு ஏற்க நேரும். உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பியவர்களே நெருக்கமானவர்களே முதுகில் குத்தும் நேரம் என்பதால் உறவினர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது.

சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள்: 14.3.2023 முதல் 6.4.2024 வரை: சதயம் ராகுவின் நட்சத்திரம். அக்டோபர் வரை ராசியிலும் அதன் பிறகு ராசிக்கு 12ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகும் ராகுவின் நட்சத்திரத்திலும் கோட்சார சனி சஞ்சரிப்பதால் இச் சமயங்களில் சுப விரயச் செலவுகளான திருமணம், வீடு கட்டுதல், வாகன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளுதல், நகை வாங்குதல், புதிய முதலீடு செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம். சிறு பிரச்சனைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள்.தலைமறைவாக வாழ்ந்தவர்கள், காணாமல் போனவர்கள் வீடு திரும்புவார்கள். வெளிநாட்டு குடியுரிமை சாத்தியமாகும். பதவி உயர்வு கிடைத்து பொறுப்புகள் அதிகரிக்கும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தாய் மாமன் அனுசரணையால் பூர்வீகம் தொடர்பான பல பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாகும். தந்தையின் அன்பும் அனுசரனையும் கிடைக்கும். 17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் உங்களின் நீண்ட நாள் பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும். அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் உங்களை தேடி வரும்.வேலையாட்களால் செலவும், பிரச்சனையும் தோன்றும். தொழிலில் இதுவரை ஜாதகர் காட்டி வந்த வீரம், வேகம், விவேகம் மட்டுப்படும். சிந்தனை தடுமாற்றம் , மன சஞ்சலம் அதிகமாகும்.

பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை: ராசிக்கு 9,12ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில்தந்தை மகன் உறவு சிறக்கும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைக்கும். பல தலைமுறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தை சரிபார்த்து தில ஹோமம் செய்ய ஏற்ற காலம். புனித நீராடல், புனித தல யாத்திரை சென்று வர வாய்ப்பு கிடைக்கும். இஷ்ட , குல, உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும் காலம். சிலருக்கு சொந்த கோவில் கட்டும் அமைப்பும் உண்டாகும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு உங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். 30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள் ,ஊழல், தேர்தல் வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும். கடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப்பெறுவீர்கள். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடும் நேரம். தந்தையின் ஆரோக்ய குறைவு உங்களை கவலையில் ஆழ்த்தும். திருமணம்: திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும். கடந்த சில வருடங்களாக கோட்சார ராகு கேதுவினால் தடைபட்ட திருமணம் ஏப்ரல் மாதத்திற்கு மேல் நடைபெறும். பொருத்தமான ஜாதகம் வந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். முதல் திருமணத்தில் தோல்வியை சந்தித்தவர்களுக்கு அடுத்த இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமையும். இது வரை ஏதாவது காரணம் கூறி திருமணத்தை தள்ளியவர்கள் கூட திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள். பெண்கள்: பெண்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். உங்களிடம் விரோதமாக இருந்தவர்கள் கூட அன்பாக பேசுவார்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த அனைத்து சிக்கலும் தீரும். குடும்பத்துடன் உல்லாசமாக சுற்றுலா சென்று வருவீர்கள். விரும்பிய நகை, ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குழந்தை பாக்கியம் தாமதம் உள்ள தம்பதியினர் உரிய மருத்துவம் செய்ய குழந்தை பாக்கியம் கிடைக்கும் . பரிகாரம்: ஆக மொத்தம் இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் கிணற்றில் விழுந்த கல்லாக இருந்த அனைத்து முயற்சிகளும் பலிதமாகும். மேலும் சாதகமான பலன்கள் அதிகரிக்க சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது. பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும். மேஷ ராசியினர் செவ்வாயின் அதி தேவதை முருகப் பெருமானை செவ்வாய் கிழமை அரளிப் பூ மாலை அணிவித்து வழிபட தடை தாமதங்கள் விலகி முன்னேற்றமான பலன் உண்டாகும்.