தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – ஒரு கப்,
முருங்கைக்கீரை – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3
பெரிய வெங்காயம் – 4
உப்பு – ஒரு ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
எண்ணெய் – 7 ஸ்பூன்
இஞ்சி சிறிய துண்டு – 1
செய்முறை:
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு 3 பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் முருங்கைக் கீரையை உருவி தண்ணீரில் அலசி, சுத்தம் செய்து எடுத்து வைக்க வேண்டும். பிறகு சிறிய துண்டு இஞ்சியை தேங்காய் துருவலில் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கப் கேழ்வரகு மாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் ஒரு கப் முருங்கைக்கீரை மற்றும் பொடியாக நறுக்கிய முக்கால் கப் வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சி சேர்த்து கைகளை வைத்து நன்றாக பிசைந்து கொடுக்க வேண்டும். பிறகு எந்த அளவிற்கு கேழ்வரகு மாவு எடுக்கிறோமோ, அதே அளவு முருங்கைக்கீரை மற்றும் வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு தோசைக்கல்லை வைக்க வேண்டும். பிறகு ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி, ஒரு உருண்டை கேழ்வரகு மாவை எடுத்து கைகளினால் அடை தட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை தோசை கல்லில் போட்டு முதலில் மூடி போட்டு மூடி விட வேண்டும். இவ்வாறு மூடி போட்டு வேக வைப்பதன் மூலம் அடை சாஃப்டாக இருக்கும். ஒரு நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து எண்ணெய் ஊற்றி மறுபக்கம் திருப்பி போட வேண்டும். இவ்வாறு இரண்டு புறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும். சுவையான கேழ்வரகு அடை தயார்.