உங்கள் பாதங்களை அழகாக்கும் சில எளிய குறிப்புகள்

முகத்தை அழகுப்படுத்திக் கொள்ள நினைக்கும் பெண்கள் பாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வசீகர முகம் கொண்ட பெண்கள் கூட பாதத்தை முறையாக பராமரிப்பதில்லை.

பாதங்கள்தானே யார் பார்க்கிறார்கள் என்று முகம், கை மட்டும் அழகுப்படுத்திக் கொள்பவர்கள் நிறைய உண்டு.

ஆனால் பாதங்களில் சுருக்கம் விழுந்து வெடிப்புகளோடு வறண்டு இருந்தால் நம் மீதிருந்த மதிப்பே சுவடு தெரியாமல் போய் விடும். எதிலேயும் மேலோட்டமாக இருக்காதீர்கள். பாதங்களையும் கவனியுங்கள். அழகு மட்டுமில்லாமல் பாதத்தின் மூலம் வரும் தொற்றுக்களையும் தடுக்கலாம்.

உங்கள் பாதங்களை அழகாக்க இதோ கீழே உள்ளவற்றை படித்து பின்பற்றுங்கள்

எண்ணெய்

தினமும் ஆலிவ், பாதாம் அல்லது தேங்காய் எண்ணெயை இரவில் தூங்குவதற்கு முன் பாதங்களில் தடவிவிட்டு செல்லுங்கள். இது பாதத்தில் ஏற்படும் வறட்சியை போக்கும். வறட்சியினால்தான் பாதங்களில் சுருக்கங்கள் ஏற்படும்.

விட்டமின் ஈ

விட்டமின் ஈ சரும சுருக்கங்களைப் போக்கும். விட்டமின் ஈ நிறைந்த எண்ணெயை பாதங்களில் தடவி வந்தால் சுருக்கங்கள் போய், கருமை மறைந்து தங்க நிறத்தில் மினுமினுக்கும்.

வெடிப்பு வராமல் தடுக்க

தினமும் குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் நன்கு துடைத்து விட்டு பின் விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்

முதலில் கால்களின் பாதங்களில் வெடிப்பு இருக்கும் இடத்தில் சோப்பு போட்டுபல் துலக்க கூடிய பிரஷ்ஷால் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

பின் ஒரு தே. க அளவிற்கு சுண்ணாம்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து அதனை ஒரு களிம்பாக குழைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்க போகும் போது அந்த களிம்பை பாத வெடிப்பில் நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு 2 வாரங்கள் தொடர்ந்து தேய்த்து வந்தால் முற்றிலுமாக குணமடையும்.