“நீங்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?”

நான் வேலை செய்யும் விடுதி, கிளினிக் என எல்லா இடத்திலும் பெண் நோய்கள் சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கான நிறைய துண்டுப் பிரசுரங்கள் இருக்கும்.

நேற்று ஒரு துண்டுப் பிரசுரம் கண்ணில் பட்டது.

“நீங்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?”
என்ற தலைப்பில் இருந்த துண்டுப் பிரசுரத்தில் பல கேள்விகள் இருந்தன.
அதில் இருந்த ஒரு கேள்வி, ” நீங்கள் நண்பர்களோடு வெளியில செல்ல யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டி உள்ளதா?”

அதாவது ஒரு துணை தன் நண்பர்களோடு இரவு டினருக்கு வெளியே போவதை தடுப்பதே ஒரு குடும்ப வன்முறைதான்.

அதில் இருந்த விடயங்களைப் பார்த்தால், குடும்ப வன்முறையில்லாத ஒரு தமிழ் குடும்பத்தைக்கூட காண முடியாது.

இந்தளவு விழிப்புணர்வை ஏற்படுத்தி குடும்பத்தில் ஏதும் பிரச்சினை இருந்தால் அது முற்றி கொலை செய்வது அல்லது தற்கொலை வரை போகாமல் தடுக்க ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் நம் சமூகத்தில்?

கொஞ்ச நாளைக்கு முன் ஒரு பெண் என்னிடம் ஆலோசனை பெற ஒரு மணி நேர அளவிலான ஓடியோ மெசேஜ் அனுப்பி இருந்தார். அவரின் கதையைக் கேட்டால், அவர் கிட்டத்தட்ட ஒரு கொடிய சித்திரவதை முகாமில் இருப்பது போலதான் பத்து வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறார்.

ஆனால் வெளியில் பார்த்தால் ஆகா வாழ்ந்தால் இப்படி ஒரு குடும்பம் போல அல்லவா வாழ வேண்டும் என நினைப்பீர்கள். குடி , வேறு பெண்கள் தொடர்பு என எதுவும் இல்லாத நல்ல தொழிலில் இருக்கும் கணவர். அந்தப் பெண்ணும் பல லட்சங்கள் உழைப்பவர். ஆனாலும் அத்தனை கொடுமைகளையும் தன் குடும்பத்திடம் கூட சொல்லாமல் உயிராபத்து வரலாமென்ற நிலையில்கூட வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி பிள்களைகளின் எதிர்காலம், ஊர் ஆட்கள் என்ன சொல்வார்கள் என்ற அச்சத்திலேயே நிறையப்பேர் குடும்பத்தில் ஏற்படுகிற கொடுமைகளை மறைத்து வெளியில் போலியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
இருவர் சேர்ந்து வாழ்தல் என்பது பரஸ்பரம் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ்வதே. இன்னொருவரை கொடுமைப்படுத்தி அடிமைபோல நடத்துவதற்கு எதற்கு குடும்பமாக வேண்டும்? அந்த வாழ்க்கையில் என்ன சந்தோசம் இருக்க போகிறது?

குடும்பத் தலைவன் என்ற எண்ணத்தை முதலில் அழிக்கவேண்டும். ஆண்தான் குடும்பத் தலைவன் அவன்தான் எல்லா முடிவும் எடுக்க வேண்டும் என சொல்லும்போதே பெண் அடிமை என நாம் ஏற்றுக்கொள்வதாகிறது.

இதிலே ஆண்களைத் திருத்த ஏலாது.
ஆனால் பெண்களை மாற்றலாம்.
“கல்லானாலும் கணவன், புல் ஆனாலும் புருசன்”
” கணவனே கண் கண்ட தெய்வம்” என்டுறதெல்லாம் பொய்யென உங்கள் பெண் பிள்ளைகளுக்குச் சொல்லிக் குடுங்கள்.

தயவு செய்து ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் சீதனம் கொடுப்பதை விட மாதாந்த வருமானம் வருமளவுக்கு படிப்பித்து விடுங்கள். திருமணத்திற்குப் பின் அவள் வேலையை விடவேண்டும் என்றால் மாப்பிள்ளையை மட்டுமல்ல மாப்பிள்ளை குடும்பத்தையே கல் எடுத்து அடிச்சுத் துரத்துங்கள்.

திருமணத்திற்குப்பின் புருசன் அடிச்சா வாங்கிக்கொண்டு இருக்கவேண்டியதில்லை என சொல்லி வளருங்கள்.

ஊர் என்ன சொல்லும் என்றெல்லாம் யோசித்து பயந்துகொண்டு இருக்கத் தேவையில்லை. புருசன் அடிக்கிறானா? வெளியே துணிந்து சொல்லுங்கள். தொடர்ந்து அடி விழுதா, அல்லது வேறு வகையில் அடிமைப்படுத்தப் படுகிறீர்களா? ஆளைத் துரத்திவிட்டு தனியே வாழுங்கள்.

சமூக ஒழுக்கம் , கலாச்சாரம் என்பது பெண்ணை அடிமையாக வைத்திருப்பதில்லை.

பிரான்சில் நடந்த கொலை சம்பந்தப்பட்ட செய்தியில், அந்தக்குடும்பம் நல்ல சந்தோசமாக இருந்தது. இப்படிச் செய்யக்கூடிய குடும்பம் என நினைக்கவே இல்லை என இருந்ததைப் பார்த்ததும் இதை எழுதத் தோன்றியது.

Sivachandran Sivagnanam