தோனியை ஓய்வு முடிவுக்கு தள்ளாதீர்கள்!

Dhoni
Dhoni

தலைமுறையில் ஒரு முறை மட்டுமே தோன்றும் வீரர்தோனி என்றும் அவரால் 39 வயதிலும் இந்திய கிரிக்கெட்டுக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்றும்  கருத்து தெரிவித்துள்ள  இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான நசார் ஹுசெய்ன், மஹேந்திரசிங் தோனியை ஓய்வு முடிவுக்கு தள்ளாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரரான மஹேந்திரசிங் தோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகளில் தோனி சிறப்பாக விளையாடினால் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள  உலக இருபது 20  தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் பிரதாக பயிற்றுநரான  ரவி சாஸ்திரி கூறியிருந்தார். 

ஆனால், கொரோனா அச்சத்தால் இம்முறை ஐ.பி.எல் கிரிக்கெட் பிற்போடப்படப்பட்டது.  

இந்நிலையில், தோனிக்கு ஆதரவாக இங்கிலாந்து  கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், வர்ணனையாளருமான நசார் ஹுசெய்ன் குரல் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக,அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு  அளித்த பேட்டியில்,  

“இந்திய அணிக்கு தோனியைத் தெரிவு செய்ய முடியுமா? இந்தக் கேள்வி மட்டும்தான் கேட்கப்படவேண்டும். ஓர் அணிக்குத் தெரிவாக வேண்டிய அனைவருக்கும் இக்கேள்வி பொருந்தும்.

ஒருமுறை தோனி ஓய்வு பெற்றுவிட்டால், அதன்பிறகு அவரை மீண்டும் அணிக்கு கொண்டுவர முடியாது. கிரிக்கெட் விளையாட்டில் உலகமே போற்றக்கூடிய ஒரு சில ஜாம்பவான்களே இருக்கிறார்கள்.

அத்தகைய மகத்தான வீரர்களை அரிதாக, அதாவது தலைமுறைக்கு ஒருவரைத் தான் பார்க்க முடியும். அப்படிப்பட்ட தோனியை அவசரப்பட்டு முன்கூட்டியே ஓய்வு பெற வைத்து விடாதீர்கள்.

நான் தோனியை பார்த்தவரையில் அவரால் இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னும் நிறைய பங்களிப்பு செய்ய முடியும் என்று நினைக்கிறேன். உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது ஒரு சில போட்டிகளில் இலக்கை விரட்டும் போது தோனி சோபிக்கத் தவறியிருக்கலாம். ஆனாலும் அவரிடம் இன்னும் திறமை இருக்கிறது” என்றார்.