உலகக்கிண்ண T20 தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார் – ஸ்மித்

Steve Smith 720x450 1
Steve Smith 720x450 1

ஐ.சி.சி. உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண இருபதுக்கு 20 போட்டி அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இத்தொடர் நடத்தப்படுமா என்ற சிக்கல் தோன்றியுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி ‘கொன்பெரன்ஸ் கோல்’ மூலம் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த போட்டியை நடத்தலாமா? அல்லது ஒத்தி வைக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

ஒருவேளை, குறித்த தொடர் ஒத்திவைக்கப்பட்டால், அக்காலப்பகுதியில் 13 ஆவது ஐ.பி.எல். தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சத்தமின்றி காய் நகர்த்தி வருகிறது.

தற்போது மூடிய மைதானத்தில் மருத்துவ அறிவுரைகளுடன் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் ஸ்டீவ் ஸ்மித் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “எப்போதும் நாட்டுக்காக விளையாடுவதே உச்சபட்சமாகும். எனவே, நான் உலக இருபதுக்கு 20 போட்டியில் விளையாடவே முன்னுரிமை அளிப்பேன். இத்தொடர்  ஒத்திவைக்கப்பட்டு,  ஐ.பி.எல். போட்டி நடந்தால் இதில் விளையாட நான் தயார். உள்ளூர் போட்டிகளில் ஐ.பி.எல். போட்டி சிறப்பானதாகும்.

கிரிக்கெட்டில்  துடுப்பாட்ட மட்டைக்கும் பந்துக்கும் இடையே நியாயமான போட்டி இருக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் விரும்புபவன். பந்தை பளபளக்க செய்ய எச்சிலை பயன்படுத்த தடை விதிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு சரியானதல்ல.  இதனை சமாளிக்க மாற்று வழிகளை கண்டுபிடிப்பது என்பது கடினமானது தான். இருப்பினும் இதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டியது ஐ.சி.சியின் பொறுப்பாகும்.

முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியை தொடர வேண்டும். அடுத்த ஆண்டில் இந்த டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக முடிவடையும் என்று நம்புகிறேன்” என்றார்.