கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ள முதலாவது இந்தியர்

sports 1
sports 1

இந்தியாவைச் சேர்ந்த 48 வயதுடைய வீரரான பிரவீன் தம்பே கரீபியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்தால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இப்போட்டித் தொடரில் விரவீன் தம்பே விளையாடும் பட்சத்தில் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெறுவார்.

மும்பை கிரிக்கெட் அணிக்காக முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரவீன் தம்பே, தனது 41 ஆவது வயதில் ஐ.பி.எல். டி20 போட்டியில் அறிமுகமானார். இதன்பின்னர் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்ற அவர், அதிக வயதில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை ஏலம் எடுத்திருந்தது. ஆனால், அபுதாபி டி10 லீக்கில் விளையாடியதால் ஐ.பி.எல். தொடரில் விளையாட அனுமதி இல்லை என்று பி.சி.சி.ஐ. தெரிவித்தது. இதனால் கொல்கத்தா அணி அவரை நீக்கியது. இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கான வீரர்கள் ஏலத்தில் பங்குபெற விண்ணப்பம் செய்தார். அவரை டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இவ்வணியின் உரிமையாளர்களில் ஒருவராக நடிகர் ஷாருக்கான் உள்ளார்.

இது குறித்து பிரவீன் கூறுகையில், ‘‘நான் உடற்தகுதியாக இருந்த போதிலும் பி.சி.சி.ஐ. என்னை விளையாட அனுமதிக்கவில்லை. அப்படியிருக்கும்போது நான் ஏன் மற்ற லீக்குகளில் விளையாடக்கூடாது. நான் இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் லீக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளேன். இதனால் டிரின்பாகோ அணி என்னை ஏலம் எடுத்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு செல்வதற்கு முன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்வேன்’’ என்றார்.

கரீபியன் பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.