கூட்டமைப்புக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அம்பிகாவுக்கே சேரும்!

ambika thamilkural
ambika thamilkural

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கொழும்பை சேர்ந்த அம்பிகாவும் நளினியும் இறக்கப்படுவதாக அறிவிப்பட்ட போது கூட்டமைப்புக்குள்ளேயே கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இவர்கள் போட்டியிடக்கூடாது என்று பலரும் கடுமையாக வலியுறுத்தினார்கள். கூட்டமைப்பில் போட்டியிடுபவர்களின் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இல்லை என்று அக் கட்சியின ஆதரவாளர்கள் பெரும் குதூகலிப்பை வெளியிட்டார்கள்.

ஆனாலும் சுமந்திரன் அம்பிகாவை மாத்திரம் கைவிடுவதாக இல்லை. கூட்டமைப்புக்குள் தன்னைப் போன்ற சிங்கள மனநிலை கொண்ட அம்பிகாவை எப்படியாவது கொண்டுவந்து, கூட்டமைப்பின் தலைமையை கொழும்புக்குள் கீழ் கொண்டுவருகின்ற திட்டத்தின் பிரகாரம், அம்பிகாவுக்கு தேசிய பட்டியலில் முதல் இடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்கும் அம்பிகாவை தேசிய பட்டியல் எம்.பி ஆக்கப் போகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்களுக்கு சில தேர்வுகள் இருந்தன. சுமந்திரன், சம்பந்தன் போன்றோருக்கு வாக்களிக்காமல், வேறு நபர்களுக்கு வாக்களிக்கலாம் என்பதே அந்த தேர்வு. கிளிநொச்சியைப் பொறுத்தவரையில் சுமந்திரனுக்கு வாக்களிக்காமல், சிறீதரனுக்கு வாக்களிக்கலாம் என்ற நிலையிருந்தது. ஆனால் இப்போது சிறீதரன் பத்து சுமந்திரனாக அவதாரம் எடுத்து விட்டார். கிளிநொச்சி – யாழ்ப்பாணத்தில் சிறீதரனுக்கு அளிக்கும் வாக்குகளும் அம்பிகாவுக்கே சேரப் போகிறது.

இங்கே மிகப் பெரிய நகைச்சுவை என்னவென்றால், சிறீதரன் போன்றவர்கள், கடந்த காலத்தில் ஜெனீவா சென்று இலங்கைளில் சண்டை நடந்தது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, அம்பிகா இலங்கை அரசுக்கு சார்பாக அங்கே வேலை செய்து கொண்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் இலங்கை அரசின் இனப்படுகொலைக் குற்றங்களுக்கு ஆதரவாகவும் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். இப்போது சுமந்திரன், சிறீதரன் எல்லோரும் அம்பிகாவின் திட்டத்தில் ஐக்கியமாகிவிட்டனர்.

சிங்களத் தலைமைகளிடமிருந்து விடுதலையை எதிர்பார்க்கும் ஈழத் தமிழினம், கொழும்பு தமிழ் தலைமைகளிடம் அகப்படும் ஆபத்தே இப்போது ஏற்பட்டுள்ளது. சிங்களத் தலைமைகளைவிடவும் கொழும்புத் தமிழ் தலைமைகள் ஆபத்தானவர்கள் என்பதை விடுதலைப் புலிகாலத்தில் இருந்தே நாம் உணர்ந்து வந்திருக்கிறோம். ஜி.ஜி. பொன்னம்பலம் காலத்தில் இருந்து இன்றைக்கு சுமந்திரன் வரையில் நீண்ட பட்டியல் ஒன்று காணப்படுகின்றது. இவர்கள் வடக்கு கிழக்கு மக்களை வைத்து தமது பதவிகளையும் நலன்களையுமே அடைந்துள்ளனர்.

ஏன் வடக்கு கிழக்கில் இருந்து சிறந்த பெண் வேட்பாளர் இல்லையா? அப்படியென்றால் சசிகலாவுக்கு தேசிய பட்டியல் வாயிலாக இடம் கொடுத்திருக்கலாமே? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக போராடும் எத்தனை பெண்கள் வடக்கு கிழக்கில் உள்ளனர்? இந்த உலகத்தையே தமது சொல்லாலும் செயலாலும் திரும்பிப் பார்க்க வைத்த முன்னாள் விடுதலைப் புலிப் பெண் போராளிகள்  எத்தனை பேர் உள்ளனர்? எதற்காக அம்பிகா மோகம் கூட்டமைப்புக்கு தேவைப்படுகின்றது?

கொழும்பில் உள்ள தமிழ் பேசும் மக்களையோ அங்கிருக்கும் சிங்கள, தமிழ் தலைவர்களையோ இப் பத்தி சாடவில்லை. அங்கிருந்து வடக்கிற்கு ஒரு அருமையான தலைவராக நீதியரசர் விக்கினேஸ்வரன் கிடைத்திருக்கிறார். வடக்கு கிழக்கில் அரசில் பிரதிநிதியாகி கொழும்புக்பு பலியான தலைவர்களின் மத்தியில் கொழும்பிலிருந்து வந்து வடக்கு கிழக்கு மக்களின் தலைவராக விக்கினேஸ்வரன் பரிமணித்துள்ளார். வரலாற்றில் நிகழ்ந்த அற்புதமாக உன்னதமாக இதை கருதலாம்.

அத்துடன் இன்றைக்கும் தென்னிலங்கையில் இருந்து கொண்டு, “தமிழர்கள் தான் இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் என்றும் சிங்களவரகள் வந்தேறுகுடிகள் என்றும் சொல்கிற விக்கிரமபாகு கருணாரத்தின போன்றவர்களை நாம் மதிக்க வேண்டும். இத்தகையவர்களிடம் சுமந்திரன் போன்றவர்கள் பாடத்தை கற்க வேண்டும். வரலாற்றையும் மக்களின் மனித உணர்வுகளையும் புரியாத சுமந்திரனின் அறிவு என்ன அறிவோ?

எனவே, இம்முறை மக்கள் மிகவும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இந்த முறை அளிக்கும் வாக்கு ஐந்து வருடங்களை மாத்திரம் பாதிக்காது. இன்னும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக பாதிக்கும். ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தலைவிதி சிங்கள மனநிலை கொண்ட கொழும்புத் தமிழர்களிடம் சிக்கி விடக்கூடாது. புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு இன்று அம்பிகாவும் சுமந்திரனும் ஆளும் வீடாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூட்டமைப்புககு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளின் விளைவும் அதுவாகத்தான் இருக்கும்.

-தமிழ்க்குரலுக்காக தாயகன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)