கால அவகாசம் என்னும் துரோகத்திற்கு தயாராகிறதா கூட்டமைப்பு?

21 copy

பொதுவாழ்வில் இருப்பவர்கள், எப்போதும் விமர்சனங்களை செவிமடுக்க வேண்டும். கீழிலிருந்து வரும் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் உள்ளீர்க்க வேண்டும். அவைகளிலிருந்து தமது கருத்துருவாக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். மாபெரும் தலைவர்களும் பெரும் மாற்றங்களை உருவாக்கிய மனித ஆளுமைகளும் மக்களின் மனங்களிலிருந்தே சாதனைக்கும் மாற்றங்களுக்குமான தீரக்கதரிசனங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அதுவே வாழ்வுக்கான கற்றலும் அடிப்படையுமாகும். இன்று நம் சூழலில் இச்சிந்தனை எப்படி இருக்கிறது?

இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் தேர்தல் முடிவுகள் எதற்கான எழுச்சி? எதற்கான ஆதரவு என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். வடக்கு கிழக்கு தமிழர் தேசத்தில் மக்கள் வழங்கிய தேர்தல் முடிவுகள் ‘பெருத்த பாடமாக’ கொள்ள வேண்டும். ஆனால் இன்னமும் அப்படியான ‘படிப்பினைகளை’ தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளதாக தெரியவில்லை.

கடந்த காலத்தில் பல்வேறு ஆசிரியர் தலையங்களின் ஊடாக, தமிழர் அரசியலில் சீர்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்து சுட்டிக் காட்டியுள்ளோம். பொறுப்பு மிக்க ஊடகம் என்ற வகையில் ஊடக அறத்தின்பாலும் தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் உரிமைக்கான அறத்தின் வழியிலும் நின்று சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு சில தமிழ் பிரதிநிதிகள் வசைகளையும் அவதூறுகளையும் அச்சுறுத்தல்களையும் விடுத்தனர்.

நாம் மாத்திரமின்றி இலங்கையின் பல்வேறு தமிழ் ஊடகங்களும் புலம்பெயர் ஊடகங்களும் சுட்டிக்காட்டுகின்ற விடயங்களை செவிமடுக்காத நிலையில் தான்தோன்றித்தனமான தமிழ் அரசியல் மீண்டும் ஒரு அதளபாதாளத்தில் தமிழர்களை தள்ளிவிடுமோ என்ற அச்சம் மேலிடத் துவங்கியுள்ளது. இலங்கையில் ஆட்சி மாறிய பின்னரும், படிப்பனைகளுடன் கூடிய நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் கூட சில அரசியல்வாதிகள் திருந்தவில்லை என்பது புலனாகிறது.

இலங்கை ஆட்சி மாற்றத்தின் பின்னர், எதிர்வரும் ஆண்டு மார்ச் மாத்தில் ஜெனீவாவில் இலங்கைப் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விடயம் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில், தமது அரசுமீதான, தம் படைகள் மீதான போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு தக்க பதிலடியை வழங்கவுள்ளதாக இலங்கை அரச தரப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு முதன் முதலில் ஐ.நா இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் என குற்றம் சுமத்தியது.

அன்று முதல் பல ஆண்டுகளாக பல தடவைகள் ஐ.நாவில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை குறித்த மனித உரிமை ஆணையாளரின் விசேட உரையில், பாரிய படுகொலைகள் மற்றும் இனவன்புணர்வுக் கொலைகள் நடந்தமையை குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் போர் நடந்த சமயத்தில் இருந்து இன்றுவரை ஐ.நாவின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை தொடர்ந்து மறுப்பை வெளியிட்டு வருகின்றது.

இந்த நிலையில் மீண்டும் போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ளுவதற்கான வழிமுறையை தேடுகின்ற முயற்சியை அரசு வெளிப்படுத்தியுள்ள நிலையில், திருவாளர் சுமந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரிந்துரையாக, திரு. க.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் கூட்டணியிடமும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் ஒரு ஆவணத்தை கையளித்துள்ளார்.

குறித்த ஆவணம் இலங்கை அரசுக்கு சார்பானது என்றும், தொடர்ந்தும் கால அவகாசத்தை வழங்கும் வகையில் இருப்பதாகவும் முன்னணியும் கூட்டணியும் குற்றம் சுமத்தி சுதந்திரனின் ஆவணத்தை நிராகரித்துள்ளனர். மிகவும் பலவீனமான ஆவணமாக காணப்படுவதாகவும் மீண்டும் காலக்கேடு அளிப்பதன் வாயிலாக ‘தமிழினம் இனி இல்லை’  என்ற நிலைக்கு தள்ளப்படும் என விக்கினேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

கடந்த காலத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனேயே ‘ஐ.நா சர்வதேச மன்றத்தின் மின்சாரக் கதிரையிலிருந்து – தூக்குமேடையில் இருந்து உங்களை காப்பாற்றினோம்’ என ராஜபக்ச தரப்பினைரை நோக்கி, மைத்திரியும் ரணிலும் கூறி வந்தனர். கடந்த ஆட்சியில் நிபந்தனையற்ற ரீதியில் கூட்டமைப்பு வழங்கிய ஆதரவும் ஐ.நா மன்ற கால அவகாசமும் தமிழ் மக்கள் தரப்பால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் என்ற துரோகத்திற்கு சுமந்திரன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருகின்றமை பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ‘ஒருபோதும் மக்களின் உணர்வுக்கும் கருத்துக்கும் கோரிக்கைக்கும் செவிசாய்க்க மாட்டோம்’ என்கிற அதிகாரப் போக்கினால் ஏற்பட்டிருக்கும் இந்த துரோகத்தை, இராஜதந்திரம் என்று கூறி ‘தமிழ் மக்களை தொடர்ந்தும் இல்லாமல் செய்கின்ற’ முயற்சிகளில் கூட்டமைப்பு ஈடுபடக்கூடாது.

அத்தகைய துரோகங்கள் தொடர்ந்தால், வரும் காலத்தில் கூட்டமைப்பு இருந்தது என்பதற்கான எந்தவொரு அடையாளங்களும் இருக்காது. அதேநேரத்தில், தமிழ் மக்கள் எப்படியான தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்? யாருக்கு மக்கள் ஆணையையும் பலத்தையும் வழங்க வேண்டும் என்ற படிப்பினையும் உணர்த்தப்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியாக விழிப்பு பெற்ற மக்களால்தான் தமது உரிமையையும் தமக்கான அமைதியையும் வெல்ல முடியுமென உணர்ந்து கொண்டால் இதுபோன்ற ஆபத்துக்கள் ஏற்பட்டிராது என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.

ஆசிரியர் பீடம் – தமிழ்க்குரல்