2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்?

ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் என்பார்கள். நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளிகளும் பெறுமதி மிக்கவை. ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு வருடங்களும் கொண்டிருக்கும் பெறுமதியை காலம் கடந்த பின்னரே உணர்கிறோம். எந்தவொரு மக்கள் கூட்டமும் கால ஓட்டத்தில் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் எதிர்நோக்கியே வாழ்கின்றனர். இந்தப் பயணத்தில் தனி மனித முன்னேற்றங்களும் சமூக முன்னேற்றங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புறுகின்றன. அந்த வகையில் இந்த  ஆண்டு ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எப்படி கழிந்திருக்கிறது?

மூன்றாம் உலகப் போர்

உலக மக்களின் வாழ்வை புரட்டிப் போட்டவொரு ஆண்டாக 2020 அமைந்துவிட்டது. இருபது இருபது (2020) என இலக்கங்களில் ஒரு அழகிய தோற்றத்தை கொடுத்திருக்கும் இந்த ஆண்டு கொரோனா பேரிடரின் ஆண்டாக உலக மக்களின் நினைவுகளில் துயரை விதைத்துப் படிந்திருக்கிறது. 1920களில் ஏற்பட்ட ஒரு நோய்த் தொற்று உலக மக்களில் பலரை காவு கொண்டது. அதற்குப் பிறகு உலக நாட்டினரை  ‘திக்குமுக்காட’ வைத்திருக்கிறது கொரோனா. முழு உலகின் அத்தனை செயற்பாடுகளையும் உலுப்பியிருக்கும் கொரோனாவை ‘மூன்றாம் உலகப் போர்’ என்கிறார்கள்.

ஈழத்தில் நடந்த இன அழிப்பு போரினாலும் ஒடுக்குமுறையினாலும் உலகம் முழுவதும் தமிழ் மக்கள் சிதறி வாழ்கின்றனர். உயிரை காக்க இலங்கைத் தீவில் இருந்து புலம்பெயர்ந்த ஈழ மக்களில் பலர் கொரோனாவுக்கு பலியாகி வருவது, ஈழ தேசத்தை பாதிக்கிறது. அந்த வகையில் ஈழத் தமிழர்கள் உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிப்புக்கு உட்பட்டுள்ளனர். அது மாத்திரமின்றி போரினால் பாதிக்கப்பட்ட சமூகம் மீண்டும் ஒரு இயல்பற்ற அசாதாரணத்தை எதிர்நோக்கியுள்ளது.

அத்துடன் கொரோனா பல ‘பாடங்களை’ மனித சமூகத்திற்கு புகட்டியுள்ளது. தன்னலம், பொறாமை, வீழ்த்தல் என மனிதர்கள் சுயநலன்களால் கட்டிய கோட்டைகளை கொரோனா தகர்த்திருக்கிறது. மாபெரும் முன்னேற்றங்களும் கண்டுபிடிப்புக்களும் நிகழ்ந்து விரல்களுக்குள் உலகம் சுருங்கிவிட்ட நிலையில் கண்ணுக்குத் தெரியாத கிருமி ஒன்று உலக மக்களை அச்சுறுத்தி ஆட்டிப் படைத்து ஆளத்துவங்கியுள்ளது. அனைத்து வீரங்களும் இறுமாப்புக்களும் கொரோனாவுக்கு அடிபணிய நேர்ந்துள்ளமை மனித சமூகத்திற்கு பெரும் பாடங்களை புகட்டியிருக்கிறது.

விக்கினேஸ்வரனின் மீள் வருகை

வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் 2020 பாராளுமன்றத் தேர்தல் வாயிலாக வெற்றி பெற்றிருப்பது, இந்த ஆண்டின் தமிழர்கள் அரசியலில் குறிப்பிடத் தகுந்த மாற்றமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக அரசியல் அக் கட்சியின் பிழையான நடவடிக்கைகளினால் சரிந்திருப்பதும் தமிழர்களின் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான ஏதுவாகவும் அடையாளமாகவும் துலங்குகிறது. அதில் விக்கியின் வருகை குறிப்பிடத்தகுந்தது.  

வடக்கின்  முதல்வராக இருந்து இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றி இலங்கை அரசினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழர் விரோதப் போக்கை வெளிப்படுத்திய விக்கினேஸ்வரன், குறுகிய காலத்தில், கட்சி மற்றும் சின்னத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்திய போதும் தன் மீதான பொதுமக்கள் அபிமானத்தால் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இது விக்கினேஸ்வரன் தலைமையில் மாற்று அரசியல் தலைமையை வலுப்படுத்த வழி திறந்திருக்கிறது.

மக்களை ஏமாற்றி, தமது பதவி மற்றும் சுகபோகங்களுக்காக அரசியல் செய்தால், அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்ற பாடத்தை ஈழத் தமிழ் மக்கள் இந்த ஆண்டு நடந்த தேர்தலில் புகட்டியுள்ளனர். நன்றாக ஓய்வெடுத்து, எதனையும் செய்துவிட்டு தமிழ் தேசியத்தின் பெயரால் தேர்தலில் நின்று வென்றுவிடலாம் என நினைக்கும் அற்பத்தன அரசியலுக்கு தமிழ் மக்கள் பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அத்துடன் இனிவரும் காலத்தில் தமிழர் அரசியலில் மிகவும் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  

நினைவேந்தல் உரிமை மறுப்பு

இந்த ஆண்டில் மாவீரர் தினத்தை நினைவுகொள்ள இலங்கை அரசு தடை விதித்திருப்பது, ஈழத் தமிழ் மக்களின் உள்ளம் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய மறுப்பும் போருமாகும். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவர் தம் குடும்பம் மற்றும் சமூகத்தின் உரிமை. அதைப்போலவே கூட்டு நினைவேந்தல்களும் சமயங்களிலும் இனங்களிலும் உள்ள பண்பாட்டு வழக்கமாகும். அந்த அடிப்படையில்தான் மாவீரர் தினத்தை அணுக வேண்டிய அரசு, அதனை தடுத்திருப்பது மிகப்பெரிய பண்பாட்டு ஒடுக்குமுறையாகும்.

புதிதாப பதவியேற்றுள்ள இலங்கை அரசு, தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மறுத்திருப்பது, இலங்கை தீவில் தமிழர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது. அத்துடன் அதனை சாதிக்கத் தவறிய தமிழ் தலைமைகளின் அணுகுமுறைகளும் அவர் தம் கையாலாகத் தனத்தையும் காட்டுகின்றது. உரிமைப் போரில் மாண்டவர்களை நினைவுகூர்வதால், அவர்கள் உயிர்த்து விடுவார்களா? அல்லது இலங்கைத் தீவு இரண்டு நாடுகள் ஆகிவிடுமா? நினைவேந்தல் செய்ய மறுப்பதன் வாயிலாகத்தான் இதனைத்தான் இலங்கை அரசு தடுக்கிறதா?

போரால் பாதிக்கப்பட்ட இனத்தின் மீள் வாழ்க்கை மற்றும் உளவியல் ஆற்றுப்படுத்தல் என்பவற்றுடன் நினைவேந்தல் மற்றும் அஞ்சலி சார்ந்த உரிமை தொடர்புபடுகிறது. மிகப் பெரிய உயிரிழப்பு மற்றும் அழிவுகளுக்கு முகம் கொடுத்த ஒரு இனத்தின் அழும், கண்ணீர் விடும் உரிமைகளை பறிப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல்களாகும். அத்துடன் அவை ஏற்படுத்தும் பாதிப்பும் இடைவெளிகளும் அதிகமாகும்.  இதனை அரசியலாக இல்லாமல், பண்பாட்டாகவும் உளவியல் தேவையாகவும் அரசு உணர்ந்திருக்க வேண்டிய அதே சமயத்தில், தமிழ் தலைமைகளும் எடுத்துரைக்கத் தவறியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த ஆண்டு உலக மக்களுக்கு கொரோனாவின் துயரின் அடையாள ஆண்டாக நினைவில் தங்குகிறது. ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில், உலகப் பொதுவான அப்பேரிடருடன், நினைவேந்தல் உரிமை மறுக்கப்பட்ட ஆண்டாக நினைவில் நிற்கும். காலப் பெறுமதி அறிந்து ஈழத் தமிழினத்தின் விடியலுக்கும் அமைதிக்கும் உரிமைக்குமான புதிய வழிகள் திறக்கும் ஆண்டாக 2021ஐ  மாற்றும் வகையில் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்போடும் பொறுப்போடும் செயற்படுவோம்.

தமிழ்க்குரல் வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆசிரியர் பீடம் – தமிழ்க்குரல்