நினைவுகளுடன் போர் செய்வது நியாயமானதா?

may18
may18

மே மாதம் என்பது ஈழத் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான காலம். முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூருகின்ற ஒரு காலம். கண்ணீர் விடவும் கதறி அழவும் மனம் துடிக்கின்ற காலம். கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைந்து, அவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் அவர்கள் மீதான அழிப்புக்கு நீதி கோரவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஈழத் தமிழினமே ஒன்று திரள்கின்ற காலம். இனவழிப்புப் போரின் கொடும் நினைவுகள் மாத்திரமே மிச்சமாக வைத்திருக்கும் இனமொன்றின் நினைவின் துயர காலம் இது.

தற்போது கொரோனா பரவல் காரணமாக உலகமே பெரும் பதற்றத்தில் இருக்கிறது. பல நாடுகள் முடக்கத்தில் இருக்கின்றன. இலங்கைகூட கொரோனா பாதிப்பிற்கு முகம் கொடுத்து வருகின்றது. இந்த சூழலில்தான் இலங்கையில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. நோய்க் கிருமி ஒன்று உலகை ஆட்சி செய்து, மனித உயிர்களுக்கு எந்த பாதுகாப்பும் நிச்சயமும் இல்லை என்று ஆகிவிட்ட நிலையிலும்கூட அநியாயமாக கொல்லப்பட்டவர்களுடன் அவர்களின் நினைவுகளுடன் யுத்தம் செய்கிற கொடுமை இந்த நாட்டில் நடக்கிறது. இப்படியொரு பேரிடர் சூழலில்கூட தாம் மேற்கொண்ட மனிதப் பேரழிப்பு பற்றிய எந்தக் குற்றவுணர்வும் இல்லை என்பது கசப்பானது.

இறந்தவர்களை நினைவு கூர்வதென்பது உலகம் எங்கும் உள்ள மக்களின் வழக்கமும் பண்பாடும் ஆகும். போர், மற்றும் இயற்கை அழிவுகளில் கொல்லப்பட்டவர்களை கூட்டாக நினைவு கூர்வது என்பதும் அந்த சமூகம் சார்ந்தவர்களின் உரித்தாகும். கொடும் போரில் தன் குழந்தையை பலி கொடுத்த ஒரு தாயிற்கு தன் பிள்ளையை நினைவுகூர மறுப்பது என்பது அக் குழந்தையை பலியெடுத்தமையிலும் கொடுமையானது. தன் தாய் தந்தையை போரில் இழந்த குழந்தை ஒன்றுக்கு அவர்களை நினைவுகூரும் உரிமையை மறுப்பது மிகப் பெரிய அநீதி. கொல்லப்பட்டவர்களின் நினைவுகளையும் கொல்லுகின்ற நூதனமான யுத்தம் நடக்கிறது.

முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நினைவேந்தல் பிரகடனம் பொறிக்கப்பட்ட பாரிய கல் ஒன்று நாட்டுவதற்கு கொண்டுவரப்பட்டது. அதனை இரவுடன் இரவாக காணாமல் ஆக்கியுள்ளனர். அக் கல்லை நிறுவ இராணுவத் தரப்பினர் குழப்பம் விளைவித்திருந்த நிலையில்தான் பின்னர் அக் கல் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கே வழக்கமாக இருந்த நினைவுத் தூபியும் மிலேச்சத்தனமான இடித்து அழிக்கப்பட்டிருந்தது. இதனை யார் செய்தனர் என்பதற்கும் அங்கே இருந்த காலடிகளே ஆதாரங்களாகவும் இருக்கின்றன.

போர் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகின்றன. இப் போரில் இலட்சம் பேர் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன என்பதை பலரும் எடுத்துரைத்து வருகின்றனர். அண்மையில் காலமான மன்னார் ஆயர் இராசப்பு யோசேப்பு, இறுதிப் போருக்குப் பிறகு சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் புள்ளி விபரங்களின் அடிப்படையில் சாட்சியம் வழங்கி இருந்தார். பல இலட்சக்கணக்கான மக்களின் உறவுகள் இதில் தொடர்புபடுகின்ற அதேவேளை ஒரு இனத்தையே பெரும் துயரத்திற்கு உள்ளாக்கிய கொடுஞ்செயலாக முள்ளிவாய்க்கால் இனவழிப்பு கருதப்படுகின்றது.

மக்கள் இவ்வாறு கொல்லப்பட்ட போரை, வெற்றிப் போராக விழா எடுக்கின்ற அரசாங்கம், அதில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர மறுப்பது அல்லது மறைமுகமாக தடுப்பது என்பது நியாயமற்றது. இந்த விடயத்தில் தமிழ் தலைமைகள் எனப்படுவோர் மீதும் மக்கள பெரும் கோவமும் அவநம்பிக்கையும் கொள்ளுகின்றனர். கடந்த காலத்தில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குறைந்த பட்சம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நினைவேந்தல் உரிமையை உறுதிசெய்து அது குறித்து எழுத்துமூல ஆவணத்தை பெறத் தவறியமையும் இன்றைய இத் துயர நிலைக்கு காரணமாகும்.

அன்றைக்கு அரசாங்கத்தை பாதுகாப்பதில் செலுத்திய அக்கறையை தமிழ் இனத்தின் துயரத்தை கொண்டாடுகின்ற நீதியை அவாவுகின்ற இந்த விடயத்தில் காட்டவில்லை என்பது பகிரங்கமானது. அன்றைய ஆட்சியாளர்களையும் அவர்களின் பின்னால் இருந்தவர்களையும் காப்பாற்றி சர்வதேச அரங்கில் கால அவகாசம் பெற்றுக் கொடுத்து இனவழிப்பு விடயத்தை நீர்த்துப் போகச் செய்வதில் பெரும் பங்களிப்பை வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இன்றைய நிலைக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

நினைவுகூருகின்ற உரிமையை தடுப்பதன் வாயிலாக அல்லது அதற்கு இடையூறுகளை ஏற்படுத்துவதன் வாயிலாக ஈழத் தமிழ் மக்களின் இருப்பும் பண்பாட்டு உரிமையும் பெரும் கேள்விக்கு உள்ளாகின்றது. இறந்தவர்கள்மீதும் அவர்களின் நினைவுகள் மீதும் இத்தகைய போரை செய்பவர்களின் மத்தியில் ஈழத் தமிழ் மக்கள் வாழ்வது எவ்வளவு ஆபத்தானது என்பதும் உணர்த்தப்படுகின்றது. இதனை தமிழ் தலைமைகள் இதயச்சுத்தியுடன் மெய்யான அக்கறையும் உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும்.

இலங்கை அரசாங்கம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான முதல் இடமாக முள்ளிவாயக்காலே காணப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் இத்தகைய மிலேச்சத்தனங்களை செய்து கொண்டு தமிழ் மக்களையும் எம் நாட்டுப் பிரஜைகள் என்பது அரத்தம் இல்லாத வெறும் வாய்ச்சொல்லாகவே இருக்கும். கொல்லப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டியதன் முதல் படியாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ் மக்கள் உரிமையுடனும் சுதந்திரமாகவும் மேற்கொள்ள இடமளிப்பதில் தான் துவங்கும் என்பதையும் இலங்கையும் அனைத்துலகமும் உணர வேண்டும்.

அத்துடன் நினைவுகளுடன் கொடும் போர் செய்வது மிகுந்த நியாயமற்றது என்பதுடன் அது வாழும் மக்களின் மனங்களிலும் பாரிய காயங்களை ஏற்படுத்தும். மீண்டும் மீண்டும் தமிழ் இனத்திற்கு காயங்களை பரிசளிப்பது எந்த வகையில் நியாயமானது? இறந்தவர்களை மதிப்பதும் அவர்களை நினைவுகூர இடமளிப்பதும் மனித மாண்பு. இறந்தவர்களுடன் யுத்தம் செய்வதும் அவர்களின் நினைவுகளை அழிக்க முயல்வதும் மிருகத்தனத்திலும் இல்லாத பண்பு. இலங்கையில் இன நல்லிணக்கத்தை தொடங்குவதாக இருந்தால் மாண்டவர்களை நினைகூர அனுமதிப்பதில் இருந்தே அதனை தொடங்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

ஆசிரியர் பீடம் – தமிழ்க்குரல்